விவசாயிகள் சங்க நிர்வாகி சரமாரி வெட்டிக் கொலை
கயத்தாறு அருகே விவசாயிகள் சங்க நிர்வாகி சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.;
கயத்தாறு:
கயத்தாறு அருகே விவசாயிகள் சங்க நிர்வாகியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விவசாயிகள் சங்க செயலாளர்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே வடக்கு இலந்தைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் என்ற கோடாங்கி மாரி (வயது 52). விவசாயியான இவர் தென்னக மானாவாரி விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளராகவும், ம.தி.மு.க. ஒன்றிய விவசாய அணி செயலாளராகவும் இருந்தார்.
இவருடைய மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். நேற்று காலையில் வழக்கம்போல் மாரியப்பன் அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். அங்குள்ள சக்கம்மாள் கோவில் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, அருகில் உள்ள தனது தோட்டத்துக்கு நடந்து சென்றார்.
சரமாரி வெட்டிக்கொலை
அப்போது அங்கு வந்த மர்மகும்பல் திடீரென்று மாரியப்பனை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது கை, கால் துண்டாகி தொங்கிய நிலையில் இருந்தது. பின்னர் அங்கிருந்து மர்மகும்பல் தப்பி சென்றது.
மதியம் நீண்ட நேரமாகியும் மாரியப்பன் வீட்டுக்கு திரும்பி வராததால், அவரை குடும்பத்தினர், உறவினர்கள் தேடிச் சென்றனர். அப்போது தோட்டத்தில் மாரியப்பன் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து கயத்தாறு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
போலீசாரின் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு சிறிதுதூரம் ஓடியது. ஆனாலும் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கொலை நடந்த இடத்தில் பதிவான தடயங்களை தடயவியல் நிபுணர் கலா செல்வி சேகரித்தார்.
காரணம் என்ன?
இறந்த மாரியப்பனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இடப்பிரச்சினை காரணமாக மாரியப்பன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.
கயத்தாறு அருகே விவசாயிகள் சங்க செயலாளரை மர்மகும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.