உழவன் செயலியை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்
உழவன் செயலியை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வேளாண்மை இணை இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவெண்காடு:
உழவன் செயலியை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வேளாண்மை இணை இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.
வேளாண்மை வளர்ச்சித் திட்டம்
தமிழக அரசின் சார்பில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண்மை வளர்ச்சித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு ஊராட்சியில், ஒரு ஆண்டில் அனைத்து துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கி அந்த ஊராட்சியை முற்றிலும் மேம்பாடு அடைய செய்வதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் காவிரி பூம்பட்டினம் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து வேளாண்மை துறை மற்றும் அதனை சார்ந்த துறைகள் சார்பில் தர்மகுளத்தில் முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சசிக்குமார் தலைமை வகித்தார். சீர்காழி வேளாண்மை துறை உதவி இயக்குனர் ராஜராஜன், முன்னோடி விவசாயிகள் சம்பந்தம், ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை உதவி அலுவலர் அலெக்சாண்டர் வரவேற்றார்.
உழவன் செயலி
இந்த முகாமை மயிலாடுதுறை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு வேளாண்மைத்துறை மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தற்போது உழவன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த செயலியை அனைத்து விவசாயிகளும் தங்களுடைய செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில், அந்த செயலி மூலம் வானிலை நிலவரம், பொருட்களின் சந்தை நிலவரம், விதை மற்றும் வேளாண் இடுபொருட்களின் அன்றைய விலை உள்ளிட்ட பல்வேறு நன்மை பயக்கும் தகவல்கள் உள்ளன. ஆகவே, ஒவ்வொரு விவசாயியும் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்ய முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரிகள்
முகாமில் கால்நடை பராமரிப்பு, தோட்டக்கலை துறை, ஊரக வளர்ச்சி துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறை கண்காட்சி நடந்தது.
இதில் வேளாண்மை மற்றும் அட்மா திட்டம், தோட்டக்கலை அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதர், மகளிர் திட்ட அலுவலர் செந்தமிழ்ச்செல்வி உள்பட பல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் ராஜாமணி நன்றி கூறினார்.