காட்டு யானைகளிடமிருந்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்

பேரணாம்பட்டு பகுதியில் காட்டு யானைகளிடமிருந்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்று வனச்சரக அதிகாரியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Update: 2023-06-19 16:41 GMT

யானைகள் அட்டகாசம்

பேரணாம்பட்டு வனசரகப்பகுதியில் உள்ள பத்தலப்பல்லி, எருக்கம்பட்டு, கோட்டையூர், அரவட்லா, பாஸ்மார் பெண்டா, கொத்தூர், பொதலகுண்டா, ரங்கம்பேட்டை, குண்டல பல்லி, கோக்கலூர், சேராங்கல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக குட்டிகளுடன் சுற்றி வரும் காட்டு யானைகள் கூட்டம், மற்றும் ஒரு ஒற்றை யானை விவசாய நிலங்களிலும், மா, வாழை தோப்புகளிலும் புகுந்து சூறையாடி வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு எருக்கம்பட்டு கிராமத்தில் விவசாய நிலத்திற்கு சென்ற கோகிலா என்ற பெண்ணை ஒற்றை யானை துரத்தி தாக்கியதில் படுகாயமடைந்தார். பேரணாம்பட்டு வனச்சரக பகுதியில் தொடர்ந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகள், கிராம மக்கள் பீதியடைந்து வருகின்றனர்.

கோரிக்கை மனு

இந்தநிலையில் பேரணாம்பட்டு வனசரகர் சதீஷ்குமாரிடம் கமிழக விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் உதயகுமார், மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் மற்றும் விவசாய சங்க பிரதி நிதிகள் சென்று கோரிக்கை மனு வழங்கினர்.

அப்போது கடந்த 6 மாத காலத்தில் சேராங்கல் பகுதியில் மட்டும் 17 முறை காட்டு யானைகள் அட்டகாசம் செய்துள்ளன. வனவர், வன ஊழியர்கள் மட்டும் வந்து பாதிப்புகளை பார்வையிட்டு செல்கின்றனர். ஆனால் வனச்சரகர் பார்வையிட வரவில்லை. விவசாயிகள் உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். யானைகள் வருவதை தடுக்க இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

பாதுகாக்க வேண்டும்

கேரளாவில் ரெயில்வே தண்டவாள இரும்பு தூண்களால் தடுத்தும், மண்சரிவு ஏற்படும் பகுதியில் அகழியை சிமெண்டால் கட்டி காட்டு யானைகள் புகாதவாறு தடுத்துள்ளனர். அதே போன்று தமிழகத்திலும் அமைத்து யானைகளிடமிருந்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதற்கு வனசரகர் சதீஷ்குமார் கூறுகையில் இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்