கூடலூரில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

கூடலூரில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2023-09-13 19:15 GMT

கூடலூர்

கூடலூர் 2-ம் மைல் சாலீஸ்பரி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது பச்சை தேயிலை விலை குறைவால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து சாலீஸ்பரி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை உறுப்பினர்கள் நல சங்கம் சார்பில் பசுந்தேயிலைக்கு உரிய விலை வழங்க கோரி நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் 2-ம் மைலில் நடைபெற்றது. சங்க தலைவர் கணபதி தலைமை வகித்தார். செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். துணைத்தலைவர் அசைனார், துணை செயலாளர் வெங்கடேஷ், பொருளாளர் ஆபிரகாம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் ஆனந்தராஜா, ஆலோசகர் மஞ்சமூலா சுப்பிரமணி, பொருளாளர் ஆபிரகாம், சிபிஎம் ஏரியா செயலாளர் மணி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் எம்.எஸ். சுவாமி நாதன் கமிட்டி பரிந்துரை மற்றும் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படியும் பச்சை தேயிலைக்கு குறைந்த பட்ச விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.33.75 பைசாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேயிலை செடிகளுக்கு இடுபொருட்களான உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு மானியம் வழங்க வேண்டும். ஏல மையங்களில் தேயிலை தூளுக்கான அடிப்படை ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும்.

ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் ஊட்டி தேயிலைக்கு தேவையான தேயிலைத்தூளை நீலகிரி மாவட்டத்தில் இருந்து முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சாலையில் உறுப்பினர்களாக உள்ள சிறுகுறு விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்