கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்
கலப்பட உர விற்பனையை தடுக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கம் தாலுகா பாலியப்பட்டு பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை, விவசாயி. இவர் தனது நிலத்தில் முல்லைச் செடி மற்றும் கத்திரி பயிர் செய்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சியில் உள்ள தனியார் உரக்கடையில் டி.ஏ.பி. உரம் ஒரு மூட்டை வாங்கி உள்ளார். அதனை பயிருக்கு போட பிரித்த போது அந்த மூட்டையில் உரத்துடன் களிமண், கண்ணாடி தூள், எம்சாண்ட் போன்றவை கலந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அதைத்தொடர்ந்து இன்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கலப்பட உர மூட்டையை எடுத்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
அப்போது அவர்கள் கலப்பட உரத்தை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் தண்ணீர் எடுத்து அதில் உரத்தை கலந்து காண்பித்து கலப்பட உரத்தை கொடுத்து ஏமாற்றிய உரக்கடைக்காரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலப்பட உரம் குறித்து அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்ய வேண்டும். கலப்பட உர விற்பனையை தடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் கலெக்டர் முருகேசை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது அவர்கள் கலெக்டர் முன்பு தண்ணீரில் கலப்பட உரத்தை கலந்து களிமண் கலந்து இருப்பதை காண்பித்தனர்.
இதையடுத்து கலெக்டர் வேளாண்மை அதிகாரிகளை அழைத்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கலப்பட உரம் குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.