விவசாயிகள், தேசியக்கொடியேந்தி ஆர்ப்பாட்டம்

விவசாயிகள், தேசியக்கொடியேந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-06-02 21:13 GMT

கும்பகோணம்

தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கும்பகோணம் ரெயில் நிலையம் எதிரில் கையில் தேசியக்கொடியேந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க நிர்வாகி வரதராஜன் தலைமை தாங்கினார். சின்னதுரை, முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சுந்தர.விமலநாதன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.

மகசூல் பாதிப்பு

அவர் பேசும்போது, தமிழ்நாட்டில் விவசாயிகள் 2021-ம் ஆண்டு கோடை சாகுபடி மற்றும் 2021-22 குறுவை பருவத்தில் சம்பா, தாளடி நெற்பயிர் சாகுபடி மேற்கொண்டிருந்தனர். ஆனால் அறுவடைக்கு முன்பே பருவம் தவறி பெய்த மழையால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு, சேதமடைந்து மகசூல் பாதிப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில் விவசாயிகள் நெற்பயிர் அறுவடை செய்வதற்கு முன்பே பயிர்காப்பீட்டு நிறுவனம், வேளாண் மற்றும் புள்ளியியல் துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் விளைநிலங்களுக்கு வந்து பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் பயிர் அறுவடை சோதனைகளை முடித்து சென்றனர்.

பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை

ஆனால் பல மாதங்களாகியும் பயிர் மகசூல் இழப்பு விபரங்களை விவசாயிகளுக்கு தெரிவிக்கவில்லை. இணைய தளத்திலும் வெளிப்படையாக வெளியிடவில்லை. விவசாயிகள் காப்பீட்டு செய்திருந்த தொகைக்கான இழப்பீட்டை இன்னும் அறிவிக்கவில்லை.

எனவே 2021-ம் ஆண்டு கோடை சாகுபடி மற்றும் 2021-22 குறுவை பருவத்தில் சம்பா, தாளடி நெற்பயிர் மகசூல் பாதிப்புக்கான காப்பீடு இழப்பீட்டு தொகையான ரூ.1,200 கோடியையும், காலதாமதத்திற்கான வட்டியையும் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றார்.





Tags:    

மேலும் செய்திகள்