விவசாயி கொலை: 3 பேருக்கு ஆயுள் தண்டனை - ஓசூர் கோர்ட்டில் தீர்ப்பு
தளி அருகே விவசாயி கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.;
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி சி.ஆர்.பாளையம் அருகேயுள்ள குப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசப்பா (வயது55). விவசாயி. இவரை, கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 30-ந்தேதி மாலை பியாரகப்பள்ளியை சேர்ந்த லட்சுமிநாராயணன் (30) என்பவர் வீட்டிற்கு வந்து வெளியே அழைத்து சென்றார்.
இதனால் வெங்கடேசப்பா மோட்டார் சைக்கிளில் சென்றார். தேவகானப்பள்ளி அருகே உள்ள தைல தோப்பிற்குள் சென்ற போது, அங்கு லட்சுமி நாராயணன் நண்பர்களான பாரந்தூரை சேர்ந்த பசவராஜ் (29), எஸ்.முதுகானப்பள்ளியை சேர்ந்த சந்தோஷ்குமார் (29) ஆகிய 2 பேர் இருந்தனர். பின்னர், வெங்கடேசப்பாவிடம் மது குடிப்பதற்கும், செலவுக்கும் பணம் தருமாறு 3 பேரும் வற்புறுத்தினர். ஆனால், அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் அவர்கள், வெங்கடேசப்பாவை கத்தியால் குத்திக்கொலை செய்தனர்.
மேலும், அவர் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.8,550-ஐ 3 பேரும் எடுத்து சென்றனர். இந்த கொலை சம்பவம் குறி*த்து, தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமி நாராயணன், பசவராஜ், சந்தோஷ்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரோஸ்லின் துரை, குற்றம் சாட்டப்பட்ட லட்சுமிநாராயணன், பசவராஜ், சந்தோஷ்குமார் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.