விவசாயிகள் நூதன போராட்டம்
கோவில்பட்டியில் விவசாயிகள் ஒற்றை காலில் நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தேசிய விவசாய சங்க தலைவர் வக்கீல் ரெங்கநாயகலு தலைமையில் மாவட்ட காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் வக்கீல் அய்யலுசாமி, ஆடு வளர்ப்போர் சங்க தலைவர் கருப்பசாமி, இளையரசனேந்தல் உரிமை மீட்புக் குழு தலைவர் முருகன் மற்றும் நிர்வாகிகள் தலையில் முக்காடு அணிந்தும், ஒற்றை காலில் நின்றும் நூதன போராட்டம் நடத்தினர். பின்னர் உதவி கலெக்டர் மகாலட்சுமியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், 'இளையரசனேந்தல் பிர்காவை சேர்ந்த 12 பஞ்சாயத்துகள் மட்டும் தென்காசி மாவட்டம் குருவிகுளம் யூனியனில் தற்போது வரை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள், வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்து வருகின்றனர். வளர்ச்சி பணிகளும் பாதிக்கப்படுகிறது. இந்த 12 பஞ்சாயத்துகளும் கோவில்பட்டி நகரின் அருகாமையில் உள்ளது. எனவே இந்த 12 பஞ்சாயத்துகளையும் கோவில்பட்டி யூனியனுடன் இணைக்கவும், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து அலகில் சேர்க்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்' என்று கூறியிருந்தனர்.