மாவட்டத்தில் உழவர் சந்தைகள் மேம்படுத்தப்படுமா?

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளை மேம்படுத்தப்படுமா? என்கிற எதிர்பார்ப்பில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளனர்.

Update: 2022-10-25 19:48 GMT

உழவர்சந்தைகள்

நாட்டின் முதுகெலும்பான விவசாய தொழிலை பேணி காப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன. ஆனால் அவற்றில் ஒருசில திட்டங்கள் மட்டுமே பொதுமக்களிடம் வரவேற்பை பெறுகின்றன. அந்த வகையில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மதுரை மாவட்டம் அண்ணாநகரில் கடந்த 1999-ம் ஆண்டு நவம்பர் 14-ந் தேதி தொடங்கி வைத்த உழவர்சந்தை திட்டம் உன்னதமான திட்டமாக போற்றப்பட்டது.

இந்த திட்டத்தின் நோக்கம் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைவிக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை இடைதரகர்கள் இன்றி நேரடியாக மக்களிடம் விற்பனை செய்து நல்ல லாபம் அடைய வேண்டும். மக்களும் மனநிறைவு பெற வேண்டும் என்பது தான். தொடக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திட்டம், கடந்த 10 ஆண்டுகளாக சில மாவட்டங்களில் அடையாளத்தை இழந்து விட்டது.

100 டன் காய்கறி, பழங்கள் விற்பனை

நாமக்கல் மாவட்டத்தை பொறுத்த வரையில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் உழவர் சந்தைகள் நாமக்கல், திருச்செங்கோடு, ராசிபுரம், மோகனூர், குமாரபாளையம், பரமத்தி வேலூர் ஆகிய 6 இடங்களில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தினசரி சுமார் 100 டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையாகி வருகின்றன. நாமக்கல்லை பொறுத்த வரையில் இங்குள்ள கோட்டை சாலையில் உழவர்சந்தை இயங்கி வருகிறது. இங்கு சனி, ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில் சுமார் 30 டன் காய்கறிகளும், இதர நாட்களில் 20 டன் காய்கறிகளும் விற்பனை செய்யப்படுகின்றன. தினசரி 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேர் இந்த உழவர்சந்தைக்கு வருகை தருகிறார்கள். இந்த உழவர்சந்தையில் 1,540 விவசாயிகள் பதிவு செய்து உள்ளனர். தினசரி 200 விவசாயிகள் வரை காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.

இதேபோல் திருச்செங்கோடு உழவர்சந்தையில் மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், கபிலர்மலை வட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சுமார் 865 பேர் பதிவு செய்து உள்ளனர். நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.3 லட்சத்துக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனையாகின்றன. திருச்செங்கோடு உழவர் சந்தையில் மட்டும் கடந்த ஆண்டு 3 ஆயிரத்து 500 டன் காய்கறிகள் சுமார் ரூ.14½ கோடிக்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பணத்திற்கு உத்தரவாதம் இல்லை

உழவர்சந்தைகளின் செயல்பாடுகள் குறித்து நாமக்கல் மாவட்ட விவசாயிகள் மற்றும் நுகர்வோர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

நாமக்கல் உழவர்சந்தை பெண் விவசாயி பாப்பாத்தி:-

நான் இந்த உழவர்சந்தையில் கடந்த 20 ஆண்டுகளாக எனது நிலத்தில் விளையும் காய்கறிகளை விற்பனை செய்து வருகிறேன். வெளிச்சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்தால், பணத்திற்கு உத்தரவாதம் இல்லை. சில வியாபாரிகள் கடன் சொல்லிவிட்டு காய்கறிகளை வாங்கி செல்வார்கள். பின்னர் தராமல் ஏமாற்றி விடுவார்கள். ஆனால் இங்கு தினசரி வியாபாரம் முடிந்த பிறகு பணத்தை எண்ணி எடுத்து சென்று விடலாம்.

இங்கு கழிப்பிட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் உள்ளன. கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு தான் அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

நாமக்கல் உழவர்சந்தைக்கு வந்த சண்முகம்:-

வெளிச்சந்தையில் வாங்கும் காய்கறிகளில் சிறிய அளவில் வாடல் இருக்கும். ஆனால் உழவர்சந்தையில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் பிரஷ்ஷாக இருக்கும். மேலும் விவசாயிகளே இங்கு விற்பனை செய்வதால், விலையும் குறைவாகவே காணப்படும்.

இந்த உழவர்சந்தையின் அருகே கமலாலய குளம் இருப்பதால், அது நிரம்பும்போது இதன் வளாகத்தில் நீரூற்று ஏற்பட்டு, வளாகத்தில் தண்ணீர் தேங்குகிறது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கழிவறைகளை இன்னும் சுகாதாரமான முறையில் பராமரித்தால் நன்றாக இருக்கும்.

7 நாட்களும் கிடைக்க வேண்டும்

திருச்செங்கோடு குமரேசபுரம் பகுதியை சேர்ந்த இல்லத்தரசி கவிதா:-

திருச்செங்கோடு உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகளை தினசரி வாங்கி செல்கிறேன். விவசாயிகள் தங்களது விளை பொருட்களை நேரடியாக இங்கே கொண்டு வருகின்றனர். நேரடியாக அவர்களிடம் இருந்து இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகள், பழங்களை வாங்குவதால் ஆரோக்கியம் மேம்பட வழிவகை செய்கிறது.

மேலும் இங்கே செவ்வாய் மற்றும் சனிக்கிழமை ஆகிய 2 நாட்களில் மட்டுமே அதிகளவில் விவசாயிகள் தங்களது பொருட்களை கொண்டு வருகின்றனர். திருச்செங்கோடு நகர மக்களும் இந்த 2 நாட்களில் தான் வாரத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். மற்ற நகரங்களில் உள்ளதை போல் அனைத்து நாட்களிலும் அனைத்து விவசாயிகளும் தங்களது காய்கறிகளை கொண்டு வந்தால் பொதுமக்களும் 7 நாட்களும் பிரஷ்ஷான காய்கறிகளை தினமும் வாங்கி உண்பதற்கு வாய்ப்பாக அமையும்.

கூடுதல் கடைகள்

திருச்செங்கோடு ஆன்றாபட்டி விவசாயி செல்லமுத்து:-

நான் எனது விவசாய நிலத்தில் இருந்து எலுமிச்சை பழம், கொய்யாக்காய், கத்திரிக்காய், தேங்காய், மாங்காய், கீரை வகைகளை விற்பனைக்கு எடுத்து வருகின்றேன். எனது தோட்டத்தில் விளைவிக்கின்ற காய்கறிகள், பழங்களுக்கு உரங்கள் போடுவதில்லை. இயற்கை முறையில் விவசாயம் செய்கின்றேன்.‌ அதனால் பழங்கள் காய்கறிகள் மிகவும் ஆரோக்கியமாகவும் சுவை மிக்கதாகவும் இருக்கின்றன. எனவே தினசரி வாடிக்கையாளர்கள் எனது தோட்டத்தில் விளைந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் தேங்காய்களை விரும்பி வாங்கி செல்கின்றனர். தற்போது இந்த உழவர் சந்தையில் 84 கடைகள் மேடை அமைக்கப்பட்டு உள்ளது. இன்னும் கூடுதலாக கடைகளை அமைத்தால் அனைத்து விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். மழைக்காலங்களில் உள்ளே கடை போட்டு விற்பனை செய்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. எனவே மழைநீர் தேங்காமல் இருந்திட வசதிகள் செய்து தர வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்