விவசாயிகள் மண்டியிட்டு ஆர்ப்பாட்டம்

வளையப்பட்டியில் சிப்காட் திட்டத்தை கைவிட கோரி விவசாயிகள் மண்டியிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-15 18:37 GMT

மோகனூர்

சிப்காட் அமைக்க தடை

மோகனூர் ஒன்றியம் வளையப்பட்டி, பரளி, அரூர், என்.புதுப்பட்டி, லத்துவாடி ஆகிய கிராம ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதியில், தமிழக அரசு தொழில் துறையின் மூலம் 'சிப்காட்' அமைக்க நிலம் எடுப்பதாக ஆய்வு பணியை மேற்கொள்கிறது. சிப்காட்டிற்காக ஆய்வு செய்யும் பகுதி மலைகளும், கரடுமுரடான பகுதிகளாகவும் உள்ளன. சமவெளிப் பகுதிகள் இல்லாத பகுதி. இந்த மலைப்பகுதியில் இருந்து தான், மழைக்காலங்களில் நீர்வடிந்து கால்வாய்கள் மூலம், பெரிய ஏரிகளுக்கு நீர் செல்கிறது.

சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர காரணமாக உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த பகுதியில்தான் அதிக அளவில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் மக்காச்சோளம், பழத்தோட்டங்கள் அமைத்து விவசாயம் செய்யப்படுகிறது. கஸ்தூரி மான் மலைக்காட்டில் இருந்து பல வாய்க்கால்களில் தண்ணீர் பிரிந்து செல்கிறது. சிப்காட் அமையும் பட்சத்தில் தண்ணீர் செல்லும் அனைத்து இடங்களும் அடைபட்டு நீர்வழிப்பாதை முற்றிலும் சேதம் அடைவதற்கு வாய்ப்பாக அமையும்.

மேலும், 'சிப்காட்' அமையும்போது, காற்றில் மாசு ஏற்பட்டு சுற்றுப்புறங்களில் உள்ள லட்சக்கணக்கான கோழிகளுக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உள்ளது. அவற்றை கருத்தில் கொண்டு, 'சிப்காட்' அமைப்பதை தடை செய்ய வேண்டும் என, பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மண்டியிட்டு ஆர்ப்பாட்டம்

இந்நிலையில், விவசாய முன்னேற்ற கழகம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம், மோகனூர் அடுத்த வளையப்பட்டியில் நேற்று நடந்தது. விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். இதில் மோகனூர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ரவிச்சந்திரன், விடுதலை களம் கட்சி நிறுவன தலைவர் நாகராஜன், கொ.ம.தே.க. ஒன்றிய செயலாளர் சிவக்குமார், பா.ஜ.க. பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிப்காட் அமைக்க நிலம் கையப்படுத்துவதால் விவசாயம் பாதிக்கும். இங்குள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அதனால் சிப்காட் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வளையப்பட்டி வருவாய் ஆய்வாலர் அலுவலகம் முன்பு மண்டியிட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக முக்கிய வீதிகள் வழியாக விவசாயிகள், பெண்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சியை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்