பருவ மழையை நம்பி சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்

கொள்ளிடம் பகுதிக்கு வாய்க்கால்களில் தண்ணீர் வராததால் பருவ மழையை நம்பி சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், நிலங்களை உழவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.;

Update:2023-10-05 00:15 IST

கொள்ளிடம்

கடைமடை பகுதி

மயிலாடுதுறை மாவட்டத்தின் கடைமடை பகுதியான கொள்ளிடத்திற்கு இதுவரை காவிரி நீர் வந்து சேரவில்லை. அவ்வப்போது பெய்து வரும் மழையை வைத்து விவசாயிகள் தங்கள் நிலங்களை சம்பா சாகுபடிக்காக உழவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலும் நேரடி விதைப்பு முறையில் சாகுபடி செய்யும் வகையில் நிலத்தை உழவு செய்து வருகின்றனர்.

தண்ணீர் கிடைப்பதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருவதால் வடகிழக்கு பருவ மழையை நம்பி விவசாயிகள் கொள்ளிடம் பகுதியில் சம்பா சாகுபடி பணியில் இறங்கி உள்ளனர்.

சம்பா சாகுபடி

மின் மோட்டாரை பயன்படுத்தி 10 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் தற்போது அறுவடை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 80 சதவீதம் அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளது. மின் மோட்டார் வைத்திருக்கும் விவசாயிகள் சம்பா சாகுபடிக்காக நிலங்களை டிராக்டர் மூலம் உழவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், குறுவை அறுவடைப்பணி முடிந்து விட்டது. சம்பா சாகுபடி பணிக்கு வாய்க்கால்களில் இதுவரை தண்ணீர் வரவில்லை. தற்போது பருவ மழை பெய்து வருவதால் நிலத்தடி நீரை பயன்படுத்தி சம்பா சாகுபடிக்கு நிலத்தை உழவு செய்து வருகிறோம்.

மழைநீர்

மழை பெய்ய தொடங்கி விட்டால் மழை நீரை பயன்படுத்தியும், பாசன வாய்க்கால்களில் இருந்து வரும் தண்ணீரை பயன்படுத்தியும் சாகுபடி பணியில் ஈடுபட ஏதுவாக இருக்கும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்