நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரம்

அன்னவாசல் சுற்று வட்டார பகுதியில் நெல் சாகுபடி பணிகளில் விசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நாட்டுப்புற பாடல்களை பாடியவாறு நாற்று நடவு பணியில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-18 18:06 GMT

அன்னவாசல்:

சாகுபடி பணிகள்

புதுக்கோட்டை மாவட்டத்தின் மேற்குபகுதி கிராமங்களான இலுப்பூர், அன்னவாசல், சித்தன்னவாசல் உள்ளிட்ட பகுதிகள் வானம் பார்த்த பூமியாகவும் கண்மாய் மற்றும் கிணத்து பாசனத்தை மட்டுமே நம்பி சாகுபடி நடைபெறும் பூமியாக திகழ்கிறது. இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக புதுக்கோட்டை மாவட்டத்தில் போதிய மழை பெய்யாததால் இந்த பகுதி வயல்களும் பசுமை இழந்து வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருவதால் விவசாயிகளும் முன்கூட்டியே சாகுபடி பணிகளை நம்பிக்கையோடு தொடங்கியுள்ளனர்.

நாற்று நடவு பணி

அதன் ஒரு பகுதியாக மலைக்குடிப்பட்டி, இலுப்பூர், மேட்டுச்சாலை, சென்னப்பநாயக்கன்பட்டி, வீரப்பட்டி, தான்றீஸ்வரம், காலாடிப்பட்டி, சத்திரம், முக்கண்ணாமலைப்பட்டி, குடுமியான்மலை, பரம்பூர், வயலோகம், புதூர், செங்கப்பட்டி, அன்னவாசல், கீழக்குறிச்சி, சித்தன்னவாசல், மதியநல்லூர், பணம்பட்டி, பெருஞ்சுனை, சிறுஞ்சுனை, எல்லைப்பட்டி, குருக்களையாப்பட்டி, அடப்பக்காரசத்திரம் உள்ளிட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு மேற்கு பகுதி கிராமங்களில் மானாவாரி விவசாயிகளும், கண்மாய் பாசன விவசாயிகளும் தற்போது நாற்று நடவு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டுப்புற பாடல்

அடப்பன்கார சத்திரத்தில் உள்ள ஒரு வயலில் சில ஆண்டுகளுக்கு பின் இந்த ஆண்டு முன்கூட்டியே நெல் சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். அப்போது வயலில் நாற்று நட்ட பெண்கள் களைப்பு தெரியாமல் இருக்க நாட்டுப்புறப் பாடல்களை பாடியவாறு பாரம்பரிய முறையில் நடவு செய்தது அவ்வழியே சென்றவர்களை கவர்ந்திழுத்தது.

சாகுபடி பணிகள் மேற்கொள்வது மகிழ்ச்சி

இந்த ஆண்டு சாகுபடி பணிகளை தொடங்கி இருப்பது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், சித்தன்னவாசல் அடப்பன்காரசத்திரம் பணம்பட்டி, மதியநல்லூர், பெருஞ்சுனை, சிறுஞ்சுனை உள்ளிட்ட கிராமங்களில் பல ஆண்டுகளாக போதிய மழை இல்லாததால் விவசாயிகள் வேளாண்மை செய்ய முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகியதாகவும், இதனால் கூலி வேலை செய்து வாழ்வை நகர்த்தி வந்த நிலையில் இந்த ஆண்டு முன்கூட்டியே மழை பெய்ததால் தற்போது சாகுபடி பணிகளை நம்பிக்கையோடு தொடங்கி உள்ளோம். ஒரு புறம் மழையும், மறுபுறம் கண்மாயில் தண்ணீரும், கிணறுகளில் நீரும் இருப்பதால் இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது. அதே வேளையில் ஆட்கள் பற்றாக்குறை இருப்பதால் சாகுபடி பணிகளை தொடர்வதில் சிறுசிக்கல் ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும் பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தண்ணீர் பற்றாக்குறை இன்றி சாகுபடி பணிகளை மேற்கொள்வது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்