விவசாயிகள் தர்ணா போராட்டம்
பூச்சி மருந்து நிறுவனம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
பூச்சி மருந்து நிறுவனம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஆவின் பொது மேலாளர் சத்தியநாராயணன் தலைமை தாங்கினார். இதில் பெண்கள் உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினர்.
கூட்டத்தில் அதிகாரிகள் பேசும் போது, இந்த ஆண்டு இயல்பை விட மழை அதிகம் பெய்து உள்ளது. பருவமழை காலங்களில் இயற்கை சீற்றங்களால் விவசாயிகள் வாழ்வாதாரம், வருமானத்தை பாதுகாக்கும் வகையில், பயிர்களை காப்பீடு செய்து கொள்ள வேண்டும். அதன்படி விவசாயிகள் அடங்கல், ஆதார் அட்டை நகல், நில உரிமை பட்டா உள்ள சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தகத்துடன் உரிய பிரிமியத் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்றனர்.
செயல் விளக்கம்
கால்நடை பராமரிப்பு துறை மூலம் மாடுகளில் பெரியம்மை நோய் தடுப்பு வழிமுறைகள் குறித்தும், ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் மலர் சாகுபடி மற்றும் பூச்சிநோய் மேலாண்மை தொழில்நுட்பம் குறித்தும் செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது.
கூட்டத்தில், கூட்டுறவுச் சங்க இணைப் பதிவாளர் ரவிக்குமார், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் புருசோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தர்ணா போராட்டம்
முன்னதாக கூட்டத்தில் பங்கேற்க வந்த கெங்கவல்லி மண்மலை ஊராட்சியை சேர்ந்த விவசாயிகள் திடீரென்று கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
கெங்கவல்லி தாலுகாவிற்கு உட்பட்ட மண்மலை ஊராட்சியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்யப்படுகிறது. தற்போது விவசாய நிலங்களின் அருகில் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் நிறுவனம் கட்ட அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த நிறுவனம் அமைக்கப்பட்டால் விவசாயம் முற்றிலும் பாதிக்கும்.
கல்குவாரி
மேலும் அந்த பகுதியில் உள்ள மலைகளை குடைந்து கல்குவாரி அமைத்து வருகின்றனர். இதனால் ஆடு, மாடுகள் மலைப்பகுதியில் வளர்க்க முடியவில்லை. எனவே பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் நிறுவனம் அமைக்க கூடாது என்று கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை வைத்தோம். ஏற்கனவே நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டங்களிலும் மனுகொடுத்து உள்ளோம். ஆனால் நடவடிக்கை இல்லை.விவசாயத்தை பாதுகாக்க மண்மலை ஊராட்சி பகுதியில் பூச்சி மருந்து தயாரிக்கும் நிறுவனம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர்.