கும்பகோணத்தில் விவசாயிகள் கரும்புடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
காத்திருப்பு போராட்டம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருமண்டங்குடி பகுதியில் உள்ள திரு ஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்புக்கான நிலுவைத்தொகை மற்றும் மத்திய- மாநில அரசுகள் வழங்கிய கரும்புக்கான ஊக்கத் தொகையை வட்டியுடன் வழங்க வேண்டும். விவசாயிகள் பெயரில் வங்கிகளில் மோசடியாக வாங்கிய பல கோடி ரூபாய் கடன் தொகையை தள்ளுபடி செய்து வங்கி கடன் இல்லா சான்றிதழ் வழங்க வேண்டும். கடன் பெறாமலேயே விவசாயிகளின் பெயரில் உள்ள சிபில் குறியீட்டை உடனே ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத்தொகை அனைத்தையும் வழங்கிய பின்னர் புதிய நிர்வாகம் ஆலையில் பராமரிப்பு பணியை தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் கடந்த 25 நாட்களாக திருமண்டங்குடியில் உள்ள சர்க்கரை ஆலையின் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கையில் கரும்புடன்..
இந்தநிலையில் விவசாயிகளின் போராட்டம் குறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று ஏராளமான விவசாயிகள் கையில் கரும்புடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சாமு. தர்மராஜன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மாசிலாமணி கண்டன உரையாற்றினர். இதில் விவசாய சங்க மாவட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமாவை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.