புஜங்கராயநல்லூர் கிராமத்தில்கிளை வாய்க்கால்களை அமைக்கும் முயற்சியை அரசு கைவிட விவசாயிகள் கோரிக்கை

கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கத்தின் பாசன வாய்க்காலில் இருந்து புஜங்கராயநல்லூர் கிராமத்தில் கிளை வாய்க்கால்களை அமைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-05-01 18:07 GMT

மருதையாறு நீர்த்தேக்கம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட கொட்டரை, ஆதனூர், குரும்பாபாளையம் பகுதியில் சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் மருதையாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் ெதாடங்கப்பட்டன. சுமார் 212.47 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த நீர்த்தேக்கத்தின் மூலம் கொட்டரை, ஆதனூர், கூடலூர், கூத்தூர், புஜங்கராயநல்லூர், தொண்டப்பாடி, நொச்சிக்குளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 4,200 ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்கள் பாசன வசதி பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நீர்த்தேக்கத்தில் 2 மதகுகளும், வலது, இடது என 2 பாசன வாய்க்கால்களும் உள்ளன. கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகள் தற்போது வரை நடைபெற்று வருகிறது. ேமலும் சமீபத்தில் மருதையாறு நீர்த்தேக்கம், பாசன வாய்க்கால்கள், கிளை வாய்க்கால்கள், அணுகு சாலை உள்ளிட்ட பணிகளுக்காக எஞ்சியுள்ள நிலங்களை கையகப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

விவசாயிகள் எதிர்ப்பு

இந்தநிலையில் புஜங்கராயநல்லூர் விவசாயிகள், நீர்த்தேக்கத்தின் வலதுபுற வாய்க்காலில் இருந்து 3 கிளை வாய்க்கால்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மருதையாற்றின் வடபுறம் அமைந்துள்ள இந்த பகுதியில் நல்ல நீர்மட்டம் இருக்கிறது. மேலும் இந்த பகுதியில் தான் காரை, அணைப்பாடி, அயினாபுரம், கொளக்காநத்தம், கொளத்தூர் வழியாக வரும் ஓடையும் மருதையாற்றோடு இணைகிறது. நல்ல நீர்மட்டம் இருப்பதால் முப்போகம் விவசாயம் செய்யப்படுகிறது.

எனவே அரசு அறிவிப்பாணையில் கையகப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படும் 600 ஏர்ஸ் நிலங்களில் 100 ஏர்ஸ் நிலங்கள் கூட தரிசாகவோ, மானாவாரியாகவோ இல்லை என்பதாலும், ஆதிதிராவிடர் உள்ளிட்ட இதர சிறு, குறு விவசாயிகளுக்கு குறைந்த அளவே உள்ள நிலங்கள், வாய்க்கால்கள் அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்டால் தங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதாலும், இந்த கிளை வாய்க்கால்களை (வாய்க்கால் எண் 25, 26, 27) அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

திட்டம் பயன் அளிக்காது

கந்தசாமி:- புஜங்கராயநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள முதன்மை வாய்க்காலில் இருந்து 25-வது எண் கிளை வாய்க்கால் புதிதாக அமைக்கப்பட உள்ளது. இப்பகுதியில் சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. அதில் நாங்கள் நெல், மரவள்ளி, கடலை, மிளகாய் ஆகியவற்றை இரவை பாசன பயிர்களாக பயிரிடுகிறோம். மேலும் தென்னை மரங்களும் வளர்த்து வருகிறோம். அந்த வாய்க்கால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் செல்லும் வகையில் உள்ளது. இந்த பகுதியில் 6.5 ஏக்கர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதனால் 28 விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தை இழந்து பாதிப்படைய உள்ளனர். எனக்கு புஜங்கராயநல்லூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் அருகே 4 ஏக்கரில் வயல் உள்ளது. எனது வயல் பகுதியில் 25-வது எண் கிளை வாய்க்கால் அமைக்கப்பட உள்ளது. இந்த வாய்க்கால் அமைக்கப்பட்டால் எனது வயல் துண்டு துண்டாக வெட்டப்படும். நான் ஏற்கனவே நீர்ப்பாசன வசதியுடன் பயிரிட்டு வருகிறேன். ஆகையால் இத்திட்டம் எனக்கு பயன் அளிக்காது. 25-வது எண் வாய்க்காலை அமைப்பதற்கு 6.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்துகின்றனர். இதில் ஒரு ஏக்கரில் கூட மானாவாரி பயிர் செய்யப்படவில்லை. அனைத்தும் நீர் பாசன வசதியுடன் பயிரிடப்படுகிறது. இதைச்சுற்றி உள்ள நிலங்களிலும் இரவை பாசனத்திலேயே பயிரிடப்படுகிறது. எனவே அரசு அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். இத் திட்டத்தை செயல்படுத்தினால் எங்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.

புஞ்சை சாகுபடி

நெடுஞ்செழியன்:- கொட்டரை மருதையாறு நீர்த்தேக்க திட்டம் வரவேற்கத்தக்கது. புஜங்கராயநல்லூர் கிராம பகுதியில், நீர்த்தேக்கத்தின் தற்போதைய 25-வது கிளை வாய்க்கால் அமைக்கும் திட்டம் என்பது, எங்கள் பகுதியில் இருந்த மானாவாரி நிலங்களை இரவை நிலமாக மாற்றி அமைப்பதற்காக கடந்த 1965-ம் ஆண்டே திட்டமிடப்பட்டது. அப்போது எங்கள் கிராமத்தின் ஒரு பகுதி மானாவாரி பயிரிடும் பகுதியாகவும், மற்றொரு பகுதி பாசன வசதியுடன் இரவை விவசாயம் செய்யும் பகுதியாகவும் இருந்தது. ஆனால், மின் மோட்டார்களின் வருகைக்கு பிறகு கடந்த 30 ஆண்டுகளாக மின் மோட்டார் வசதியுடன் பெரும்பாலான நிலங்களில் புஞ்சை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். என்ன நோக்கத்திற்காக பயிரிடும் நிலங்களை கையகப்படுத்தி பாசன வாய்க்கால் அமைத்து இரவை பயிரிடும் பரப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டதோ, அந்த நிலையே தற்போது உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் மகிழ்வுடன் தற்போது பாசன சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். எனவே புதிதாக கிளை வாய்க்கால்கள் அமைப்பதற்கான தேவை இருக்காது. மேலும் கிளை வாய்க்கால்களை அமைக்க கையகப்படுத்தப்படும் நிலங்கள் பெரும்பாலும் சிறு, குறு விவசாயிகளை சார்ந்ததாகவே உள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். மேலும் ஊருக்குள் நுழையும் இந்த கிளை வாய்க்காலானது அங்கன்வாடி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பாதிக்கப்படும் வகையில் அமைக்கப்படவுள்ளது. இதனால் மாணவர்களுக்கு தேவையற்ற பதற்றம் ஏற்பட்டு அவர்களின் கல்வியும் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அதோடு ஊருக்குள் வாய்க்கால் வருவதனால் சிறுவர்கள், கால்நடைகள் என பலரும் பாதிக்கப்படும் சூழலும் உள்ளது. அதனால் மக்களின் நியாயமான கோரிக்கையை தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

தென்னை, தேக்கு, வாழை

துரைராஜ்:- 26-வது எண் கிளை வாய்க்காலில் 750 மீட்டர் நிலம் 11 விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த பகுதியில் விவசாயிகள் தென்னை, தேக்கு, வாழை ஆகியவை வைத்து பராமரித்து வருகின்றனர். கிளை வாய்க்கால் செல்லும் பகுதியில் 3 முதல் 40 ஆண்டுகளுக்கு மேலான 200 தென்னை, தேக்கு, வாழை வெட்டப்படும் அபாயம் உள்ளது. கிளை வாய்க்கால் வரும் பகுதியில் பஞ்சாயத்து அனுமதியுடன் கட்டிய வீடுகள் உள்ளன. அந்த நிலமும் கையகப்படுத்தப்பட உள்ளது. சிறு குறு விவசாயிகளுக்கு குறுகிய நிலப்பரப்பே உள்ளதால் அவையும் இந்த கிளை வாய்க்கால் மூலம் கையகப்படுத்தப்படும் என்பதால் அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். நீர் மேலாண்மை என்பது தரிசு நிலங்களை மேம்படுத்துவதற்காகவும் மற்றும் மானாவாரி சாகுபடி அதிகரித்து விவசாய உற்பத்தியை பெருக்குவதற்கும் இத்திட்டம் உதவாமல் மாறாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலேயே உள்ளது.

மின் இணைப்பு

இளையரசன்:- நான் புஜங்கராயநல்லூர் கிராமத்தில் சிறு குறு விவசாயியாக உள்ளேன். எனக்கு 269 சென்ட் நிலம் உள்ளது. இதில் 30 ஆண்டுகளாக மின் இணைப்பு பெற்று பாசன வசதியுடன் விவசாயம் செய்து வருகிறேன். என் நிலத்தில் 27-வது எண் கிளை வாய்க்கால் வரையறுக்கப்படும் பகுதியில் 40 தென்னை மரங்கள் உள்ளன. வாய்க்காலுக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டால் எனது 40 தென்னை மரமும் வெட்டப்படுவதுடன் எனது நிலத்தையும் இழந்து, வாழ்வாதாரத்தையும் இழந்து என் குடும்பம் வாழ வழி இல்லாத சூழ்நிலை ஏற்படும். ஆகையினால் கிளை வாய்க்கால்கள் அமைக்கும் பணியை கைவிட வேண்டும்.

வாழ்வாதாரம் பாதிக்கப்படும்

ராமச்சந்திரன்:- 27-வது எண் கிளை வாய்க்கால் பகுதியில் 65 ஏக்கர் பாசன நிலம் உள்ளது. அந்த நிலத்தில் மின் மோட்டார் வசதியுடன் பாசனம் ஆண்டு முழுவதும் செய்யப்படுகிறது. அதனை சுற்றியுள்ள விவசாய நிலங்களிலும் பாசன வசதியுடன் விவசாயம் செய்யப்படுகிறது. இந்த வாய்க்கால் அமைக்கப்பட்டால் இந்த பகுதியில் 22 விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இந்த கிளை வாய்க்காலுக்காக 6 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. 7 ஹெக்டேர் முதன்மை வாய்க்காலில் எனது நிலம் கையகப்படுத்தப்பட்டு வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. 27-வது எண் கிளை வாய்க்காலில் தற்போது மீண்டும் சர்வே எண் 223/ 5, 6, 7, 8 ஆகிய நிலங்களில் சுமார் 40 சென்ட் இடம் கையகப்படுத்தப்பட உள்ளதாக அறிந்தேன். எனது இடத்தை அரசு எடுத்துக் கொண்டால் எனது வாழ்வாதாரமும், எனது சந்ததியினர் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும். எனவே எளிய மக்களின் நலன் கருதி கிளை வாய்க்கால் அமைக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்