வேளாண்மை துறை திட்ட கையேடுகள் வழங்க வேண்டும் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
வேளாண்மை துறை திட்ட கையேடுகள் வழங்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
கீழ்பென்னாத்தூர், நவ.10
வேளாண்மை துறை திட்ட கையேடுகள் வழங்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
குறைதீர்வு கூட்டம்
கீழ்பென்னாத்தூர் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சந்திரன் தலைமையில் நடந்தது. கலெக்டரின் தேர்தல் அலுவலக பிரிவு கண்காணிப்பாளர் பர்வீன்பானு, தாசில்தார் சக்கரை, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பன்னீர்செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி, வட்டார கல்வி அலுவலர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோட்டக்கலை உதவி இயக்குனர் அமுல்சேவியர் பிரகாஷ் வரவேற்றார்.
கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் முத்தகரம் பழனிசாமி, வயலூர் சதாசிவம், வேட்டவலம் மணிகண்டன், அட்மா ஆலோசனை குழு தலைவர் சோமாசிபாடி சிவகுமார், உள்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பேசினர்.
நிலுவை தொகை
அப்போது விவசாயிகள் கூறியதாவது:-
கடந்த மாதங்களில் நடந்த கூட்டங்களில் கொடுத்த கோரிக்கை மனுக்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. விதை சான்றிதழ் வழங்குவதில் ஏற்படும் தவறுகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண்துறை, தோட்டக்கலைதுறை திட்ட கையேடுகள் வழங்க வேண்டும். கரும்பு நிலுவைத்தொகை கிடைக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கால்நடைகளுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியஏரி மற்றும் சித்தேரியில் முட்புதர்களை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். நந்தன் கால்வாயில் செல்லும் நீரினை மோட்டார் மூலம் விவசாயத்திற்கு பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும். கூட்டுறவு துறை மூலம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ராஜன் தாங்கல்-தளவாகுளம் வாரச்சந்தையில் கண்காணிப்பு கேமரா வைக்க வேண்டும்.
இவை உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தினர். பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர். முடிவில் வேளாண் துணை அலுவலர் சுப்பிரமணி நன்றி கூறினார்.