விவசாயிகள், தேவையற்ற உர செலவை குறைத்துக்கொள்ளலாம்
விவசாயிகள் மண்பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் தேவையற்ற உர செலவை குறைத்துக்கொள்ளலாம் என்று மயிலாடுதுறை வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் அறிவுறுத்தி உள்ளார்.
மயிலாடுதுறை:
விவசாயிகள் மண்பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் தேவையற்ற உர செலவை குறைத்துக்கொள்ளலாம் என்று மயிலாடுதுறை வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் அறிவுறுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மண் பரிசோதனை
மயிலாடுதுறை வட்டாரத்தில் தற்போது குறுவை சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளது. சாகுபடிக்கு முன்பு விவசாயிகள் தங்கள் நிலத்தின் மண்மாதிரி எடுத்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
மண் மாதிரி எடுப்பதற்கு 'வி' வடிவ குழியின் ஓரமாக மேலிருந்து கீழாக இரண்டு புறமும் ஒரே சீராக மண்வெட்டியால் ஒரு அங்குலம் அளவிற்கு மண்ணை வெட்டி எடுத்து சுத்தமான பாத்திரத்தில் வைக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 10 அல்லது 15 இடங்களில் மண்ணை சேகரித்து ஒன்றாக கலந்து அதில் இருந்து அரை கிலோ மண்ணை பகுத்தல் முறையில் எடுத்து துணிப்பையில் இட்டு பரிசோதனைகூடத்திற்கு அனுப்ப வேண்டும்.
தேவையற்ற உர செலவை...
மண்பரிசோதனை செய்வதன் மூலம் தங்கள் வயலில் எந்த வகையான பயிர்கள் சாகுபடி செய்தால் நல்ல மகசூல் கிடைக்கும், எவ்வளவு உரமிட வேண்டும் என்ற ஆலோசனைகள் வழங்கப்படும்.
இதனை பின்பற்றினால் தேவையற்ற உர செலவை குறைத்து, குறைந்த செலவில் நிறைந்த வருவாய் ஈட்டுவதற்கு விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக அமையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.