மாலை நேர உழவர் சந்தைக்கு விவசாயிகள் அனுமதி அட்டை பெறலாம்
மாலை நேர உழவர் சந்தைக்கு விவசாயிகள் அனுமதி அட்டை பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு உழவர் சந்தைகள் சிறப்பாக இயங்கி வருகிறது. தினமும் சராசரியாக ரூ.12 லட்சம் மதிப்புள்ள 30 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் இந்த உழவர்சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
2022-23 -ம் ஆண்டிற்கான வேளாண் நிதி நிலை அறிக்கையில் உழவர் சந்தைகளில் பிற்பகலிலும் வேளாண் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி மாலை நேரங்களிலும் உழவர் சந்தைகள் முழு வீச்சில் செயல்படும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவு தானியங்கள், சிறுதானியங்கள், பருப்பு வகைகள், வெல்லம், காளான், நாட்டுக்கோழி முட்டை மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் ஆகியவைகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கப்படும். மாலை நேர உழவர் சந்தையானது மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்.
மாலை நேர உழவர் சந்தையில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், ராணிப்பேட்டை, வேளாண்மை துணை இயக்குனரை (வேளாண் வணிகம்) அணுகி தனி அடையாள அட்டைகள் பெற்றுக் கொள்ளலாம். இந்த சந்தைகள் தொடங்கப்பட்டதும் நுகர்வோர்கள் பொருட்களை வாங்கி பயன்பெறலாம் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.