கருகிய உளுந்து செடிகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்த விவசாயிகள்

போதிய மழை பெய்யாததால் கருகிய உளுந்து செடிகளுடன் தென்காசி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த விவசாயிகள், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

Update: 2022-12-12 18:45 GMT

தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயினுலாப்தீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கந்தசாமி, மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, உதவி ஆணையர் (கலால்) ராஜமனோகரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பொதுமக்கள் அடிப்படை வசதிகள், இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர். மொத்தம் 353 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வெள்ளத்துரை, மாவட்ட துணைச்செயலாளர் ராமசாமி மற்றும் விவசாயிகள் கருகிய உளுந்து செடிகளை எடுத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், 'சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் வட்டாரத்தில் 25 கிராமங்களில் உளுந்து பயிரிடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் தற்போது வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனால் நன்கு வளர்ந்து வந்த உளுந்து செடிகள் போதிய தண்ணீர் கிடைக்காமல் கருகி சேதம் அடைந்து சரிந்து விழுந்து விட்டன. இதனால் சுமார் 15 ஆயிரம் ஏக்கர் உளுந்து பயிர் சேதம் அடைந்துள்ளது. அந்த பயிரில் இருந்து உளுந்து எடுக்க முடியாது. மாறாக அவற்றை மாட்டு தீவனத்துக்கு தான் கொடுக்க முடியும். அதை அறுப்பதற்கும் கூலி கொடுக்க வேண்டியுள்ளது. எனவே ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்