சேரன்மாதேவியில் விவசாயிகள் சாலைமறியல்

கன்னடியன் கால்வாயில் கூடுதலாக தண்ணீர் திறக்கக்கோரி சேரன்மாதேவியில் விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டம், சாலை மறியல் செய்தனர். அப்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

Update: 2023-07-28 19:34 GMT

சேரன்மாதேவி:

கன்னடியன் கால்வாயில் கூடுதலாக தண்ணீர் திறக்கக்கோரி சேரன்மாதேவியில் விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டம், சாலை மறியல் செய்தனர். அப்போது போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

கார் பருவ சாகுபடி

நெல்லை, தூத்துக்குடி, மாவட்ட மக்களின் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளில் இருந்து கன்னடியன் கால்வாய் மூலமாக கல்லிடைக்குறிச்சி முதல் பிராஞ்சேரி வரை வீரவநல்லூர், சேரன்மாதேவி, பத்தமடை, மேலச்செவல் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 13 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன.

ஆண்டுதோறும் கார் பருவ சாகுபடிக்காக இந்த அணைகளில் இருந்து ஜூன் 1-ந் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும். ஆனால் கடந்த பருவமழை பொய்த்ததன் காரணமாக அணைகளில் நீர்இருப்பு மிகவும் குறைந்து காணப்பட்டது. இதனால் சுமார் 1½ மாதம் தாமதமாக கடந்த 19-ந் தேதி கார் பருவ சாகுபடிக்காக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் கன்னடியன் கால்வாயில் நீர்இருப்பு குறைவாக உள்ளதால் தற்போது 250 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை எனவும், கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் எனவும் கன்னடியன் கால்வாய் விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

தொடர்ந்து தற்போது வரை கூடுதலாக தண்ணீர் திறக்காததை கண்டித்து நேற்று கன்னடியன் கால்வாய் பாசன விவசாய சங்க விவசாயிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் சேரன்மாதேவி பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தள்ளுமுள்ளு

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சேரன்மாதேவி போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கூடுதலாக தண்ணீர் திறக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என போலீசாரிடம் விவசாயிகள் முறையிட்டனர். அப்போது விவசாயிகள் தங்களது சட்டைகளை கழற்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாரியப்பன் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் விவசாயிகள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

பேச்சுவார்த்தை

தொடர்ந்து எம்.எல்.ஏ. தலைமையில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் அலுவலகத்தில் உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் வருகிற 31-ந் தேதி (திங்கட்கிழமை) தண்ணீர் திறந்து விடப்படும் என அதிகாரிகள் கூறியதை அடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர். ஆர்ப்பாட்டதில் கன்னடியன் கால்வாய் விவசாயிகள் சங்க தலைவர் பாபநாசம், செயலாளர் கண்ணப்ப நயினார் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்