எள், நிலக்கடலைகளை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை

வேப்பந்தட்டையில் தொடர் மழை பெய்ததால் எள், நிலக்கடலைகளை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

Update: 2023-05-03 18:35 GMT

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கிணற்று பாசனம் மூலம் விவசாயம் செய்து வருகிறார்கள். இவர்கள் கடந்த ஜனவரி மாதம் எள், கடலை, உளுந்து போன்ற பண பயிர்களை பயிரிட்டனர். தற்போது இந்த பயிர்களை அறுவடை செய்து வருகின்றனர். குறிப்பாக எள் பயிரிட்டுள்ள விவசாயிகள் செடிகளை அறுத்து கொண்டு வந்து உலர் களம் மற்றும் சாலைகளில் உலர வைத்து எள்ளை பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது வேப்பந்தட்டையில் தொடர் மழை பெய்து வருவதால் எள் செடிகளை உலர வைக்க முடியாமலும், செடியில் இருந்து எள்ளை பிரித்து எடுக்க முடியாமலும் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகிறார்கள். அதாவது கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற பழமொழிக்கு ஏற்ப 4 மாத காலம் ஆயிரக்கணக்கில் செலவு செய்து கஷ்டப்பட்டு விவசாயம் செய்து மகசூல் வீட்டிற்கு கொண்டு வரும் தருவாயில் மழை பெய்து வருவதால் பெரும் வேதனை அடைந்து வருகின்றனர். இதேபோல் கடலை, உளுந்து போன்ற பயிர்களை பயிரிட்டுள்ள விவசாயிகளும் தொடர் மழையினால் அறுவடை செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். மொத்தத்தில் வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாயிகளுக்கு இந்தக் கோடை மழை பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்