ஆண்டி வாய்க்காலில் தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் வேதனை

திருவெண்காடு அருகே ஆண்டி வாய்க்காலில் தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

Update: 2023-08-18 19:00 GMT

திருவெண்காடு அருகே ஆண்டி வாய்க்காலில் தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

ஆண்டி வாய்க்கால்

சீர்காழி அருகே செம்பதனிருப்பு பகுதியில் ஆண்டிவாய்க்கால் காவிரி ஆற்றில் இருந்து பிரிந்து அல்லிவிளாகம், ராதாநல்லூர், இளைய மது கூடம், திருக்காட்டுப்பள்ளி, உக்கடை, பார்த்தன்பள்ளி, திருவெண்காடு வழியாக நெய்தவாசலில் கடலில் கலக்கிறது. இந்த கிராமங்களில் ஆண்டி வாய்க்கால் மூலம் 2 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

மேலும் இந்த வாய்க்கால் பாசனத்துக்காக மட்டுமின்றி மழைக்காலங்களில் வடிகாலாகவும் பயன்படுகிறது. மேற்கண்ட பகுதிகளில் வெள்ள காலங்களில் மழை நீர் விரைந்து வடிய இந்த வாய்க்கால் மிகவும் பயனுள்ளதாக விளங்குகிறது.

புதர் மண்டிக்கிடக்கிறது

மேலும் புனிதமான இந்த வாய்க்காலில் பல இடங்களில் மண்மேடுகள், புதர் மண்டி காட்சி அளிக்கிறது. இந்த வாய்க்காலை தூர்வார வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

இந்த ஆண்டு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணை திறந்தும் இதுவரை இந்த வாய்க்காலில் தண்ணீர் வரவில்லை, கடைமடை பகுதி வரை காவிரி நீர் சென்று விட்டதாக பொதுப்பணி துறையினர் கூறி வருகின்றனர். ஆனால் இந்த வாய்க்காலில் தண்ணீர் வராமல் இருப்பதை பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளவில்லை என விவசாயிகள் கூறுகிறார்கள்.

இதுகுறித்து முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாரதி கூறியதாவது:-

தண்ணீர் விட ஏற்பாடு

ஆண்டி வாய்க்காலில் தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் மேற்கண்ட பகுதியில் 500 ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்துள்ளது. மேலும் பல கடைமடை வாய்க்கால்களில் தண்ணீர் செல்லவில்லை. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் உடனடியாக ஆண்டி வாய்க்காலில் தண்ணீர் விட ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்