கடப்பாரையால் அடித்து விவசாயியை கொன்ற மகன் கைது
மன்னார்குடி அருகே மதுபோதையில் தகராறு செய்ததை தட்டிக்ேகட்டதால் ஆத்திரம் அடைந்து கடப்பாரையால் அடித்து விவசாயியை கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
மன்னார்குடி, மார்ச்.11-
மன்னார்குடி அருகே மதுபோதையில் தகராறு செய்ததை தட்டிக்ேகட்டதால் ஆத்திரம் அடைந்து கடப்பாரையால் அடித்து விவசாயியை கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
விவசாயி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வாஞ்சியூரை சேர்ந்தவர் மோகன்(வயது 55). விவசாயி. இவர்களுடைய மகன் அரவிந்தன்(24). அரவிந்தன் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு மேற்கொண்டு படிக்காமல் தினமும் மதுபோதையில் பெற்றோரிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.
கடப்பாரையால் அடித்துக்கொலை
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மதுபோதையில் வீட்டுக்கு வந்த அரவிந்தன், தனது தாயார் கமலாவிடம் சாப்பாடு ஏன் சரியாக செய்யவில்லை என கேட்டு தகராறு செய்தார். இதை அவருடைய தந்தை மோகன் தட்டிக்கேட்டார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.அப்போது மதுபோதையில் இருந்த அரவிந்தன் ஆத்திரம் அடைந்து வீட்டில் இருந்த கடப்பாரையால் தனது தந்தையை தாக்கினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த மோகன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மோகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கைது
இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மன்னார்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.மதுபோதையில் தந்தையை மகனே கடப்பாரையால் அடித்துக்கொன்றது மன்னார்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.