அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தை அடுத்த வாணத்திரையான்பட்டிணம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் மகேஷ்குமார் (வயது 38). விவசாயி. இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் உடையார்பாளையம் கடை வீதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஏந்தல் கிராமம் அருகே வளைவில் திரும்பும்போது மகேஷ்குமார் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த மகேஷ்குமாரை அக்கம், பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மகேஷ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.