கழுத்தை நெரித்து விவசாயி கொலை; எலக்ட்ரீசியன் கைது

கழுத்தை நெரித்து விவசாயியை கொலை செய்த எலக்ட்ரீசியன் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-28 19:29 GMT

மாடு மேய்த்தபோது தகராறு

பெரம்பலூர் அருகே உள்ள வடக்கு மாதவி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (வயது 80). விவசாயி. இவருக்கு அழகம்மாள் என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகன்கள், மகளுக்கு திருமணமாகி விட்டது. நாராயணனின் வயலும், அதே பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவரின் வயலும் அதே பகுதியில் அருகருகே உள்ளது.

நாராயணனும், காமராஜும் வயல் வரப்பில் மாடுகளை மேய்த்தபோது அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதும், வாக்குவாதம் ஏற்படுவதும் வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை 9.30 மணியளவில் நாராயணன் வயல் வரப்பில் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காமராஜின் மகன் எலக்ட்ரீசியனான ராமமூர்த்தி (23), எங்கள் வயலில் எதற்கு மாடு மேய்க்கிறீர்கள் என்று நாராயணனிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

கழுத்தை நெரித்து கொலை

இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராமமூர்த்தி நாராயணனின் கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். அதனை தூரத்தில் இருந்து கண்ட நாராயணனின் மனைவி அழகம்மாள், எனது கணவரை விட்டு விடு என்று கூறிக் கொண்டே ஓடி வந்தார்.

அதற்குள் மயக்கம் அடைந்த நாராயணனை ராமமூர்த்தி கீழே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அழகம்மாள் வந்து பார்த்தபோது பேச்சு, மூச்சு இல்லாமல் நாராயணன் கீழே கிடந்தார். இதையடுத்து அழகம்மாள் நடந்த சம்பவத்தை அக்கம், பக்கத்தினரிடம் கூறி அவர்களை அழைத்து வந்தார். அவர்கள் வந்து பார்த்தபோது நாராயணன் இறந்து விட்டது தெரியவந்தது.

கைது

இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் நாராயணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ராமமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்