மாடிப்படியில் இருந்து விழுந்ததில் எலும்புமுறிவு: கை, கால்களில் போடப்பட்ட கட்டுடன் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவி

மாடிப்படியில் இருந்து விழுந்ததில் எலும்புமுறிவு ஏற்பட்டு கை, கால்களில் கட்டு போடப்பட்டு இருந்தாலும், பிளஸ்-2 மாணவி ஆர்வமாக வந்து பொதுத்தேர்வு எழுதினார்.

Update: 2023-03-13 20:48 GMT

திருமங்கலம்,

மாடிப்படியில் இருந்து விழுந்ததில் எலும்புமுறிவு ஏற்பட்டு கை, கால்களில் கட்டு போடப்பட்டு இருந்தாலும், பிளஸ்-2 மாணவி ஆர்வமாக வந்து பொதுத்தேர்வு எழுதினார்.

மாடிப்படியில் இருந்து விழுந்தார்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஒத்தை ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மகள் உமாமகேசுவரி. இவர் திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் மாடிப்படியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் மாணவியின் 2 கால்கள், இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தற்போது மாணவி வீட்டில் இருந்து வந்தார். எலும்பு முறிவு சரியாக கை, கால்களில் கட்டு போடப்பட்டு உள்ளது.

இருந்தாலும் மாணவி உமா மகேசுவரி பிளஸ்-2 தேர்வு எழுத விரும்பினார். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர், தேர்வுத் துறைக்கு தெரிவித்து உமாமகேசுவரி தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

உற்சாகத்துடன் எழுதினார்

நேற்று பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் காரில் அழைத்து வரப்பட்ட மாணவி உமா மகேசுவரிக்கு பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அவர் தேர்வு எழுதுவதற்காக தேர்வு மையத்தில் தனி இருக்கை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த இருக்கையில் அமர்ந்து அவர் உற்சாகத்துடன் தேர்வு எழுதினார்.

இதுகுறித்து அந்த மாணவி கூறும்போது, "மாடியில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்து சிரமப்பட்டு வருகிறேன். ஆனால் பிளஸ்-2 தேர்வு எழுத முடியுமா? என சந்தேகம் ஏற்பட்டது. எனக்கு ஆசிரியர்களும், பெற்றோரும் தைரியமூட்டி தேர்வு எழுதுவதற்கு உற்சாகப்படுத்தினர். இதனால் நான் தற்போது தேர்வு எழுத வந்துள்ளேன். தேர்வுக்கு நன்றாக படித்துள்ளேன். நீட் தேர்வில் வெற்றி பெற்று டாக்டராக வேண்டும் என விரும்புகிறேன்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்