தவறி விழுந்த மரக்கடை உரிமையாளர் சாவு
தூத்துக்குடி அருகே தவறி விழுந்த மரக்கடை உரிமையாளர் பரிதாபமாக இறந்து போனார்.
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 55). இவர் அந்த பகுதியில் மரக்கடை நடத்தி வருகிறார். இவர், தனது சொந்த ஊரான ஏரல் அருகே உள்ள கொத்தலரி விளையில் கோவில் கொடை விழாவுக்கு வந்து உள்ளார். நேற்று சண்முகவேல், கூட்டாம்புளி டாஸ்மாக் எதிரே உள்ள குளத்தின் தடுப்புச்சுவரில் குடிபோதையில் அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத நிலையில் சுவரில் இருந்து தவறி குளத்தில் விழுந்ததாக கூறப்படுகிறது. குளத்தில் தண்ணீர் இல்லாததால் பலத்த காயம் அடைந்த சண்முகவேல் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.