மரவள்ளிக்கிழங்கு விலை வீழ்ச்சி

நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் வரத்து அதிகரிப்பால் மரவள்ளிக்கிழங்கு விலை வீழ்ச்சியடைந்தது. டன் ரூ.8 ஆயிரத்திற்கு விற்பனையானது.;

Update:2022-10-26 00:18 IST

மரவள்ளிக்கிழங்கு

கரூர் மாவட்டம் நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மரவாபாளையம், குளத்துப்பாளையம், குந்தாணி பாளையம், வடுகபட்டி, வேட்டமங்கலம், ஓலப்பாளையம், ஒரம்புபாளையம், நல்லிக்கோவில், பேச்சிப்பாறை, பழமாபுரம், புன்னம்சத்திரம், நடையனூர், கொங்கு நகர், மூலிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கை அதிகளவில் பயிரிட்டுள்ளனர்.

இப்பகுதிகளில் விளையும் மரவள்ளிக்கிழங்குகளை வியாபாரிகள் வாங்கி சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

விலை வீழ்ச்சி

கிழங்கு ஆலைகளில் மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர். மரவள்ளிக்கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் மரவள்ளிக்கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிக்கிழங்கை மில் அதிபர்கள் டன் ஒன்று ரூ.12 ஆயிரத்திற்கு வாங்கி சென்றனர். தற்போது மரவள்ளிக்கிழங்கு டன் ரூ.8 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.

அதேபோல் கடந்த வாரம் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்று ரூ.15 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.9 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. மரவள்ளிக்கிழங்கு வரத்து அதிகரித்து உள்ளதாலும், ஜவ்வரிசி விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதாலும் ‌மரவள்ளி‌க்கிழங்கின் விலை சரிவடைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மரவள்ளிக்கிழங்கு விலை சரிவடைந்து உள்ளதால் மரவள்ளிக்கிழங்கு பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்