விபத்தை ஏற்படுத்திய வழக்கில் ஆஜராகாததால்; நடிகை யாஷிகா ஆனந்துக்கு பிடிவாரண்டு
விபத்தை ஏற்படுத்திய வழக்கில் ஆஜராகாததால் நடிகை யாஷிகா ஆனந்துக்கு பிடிவாரண்டு பிறப்பித்து செங்கல்பட்டு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.;
செங்கல்பட்டு,
'இருட்டு அறையில் முரட்டுக்குத்து', 'நோட்டா', 'ஜாம்பி' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த இவரது தோழி வள்ளிசெட்டி பவானி (வயது 28). அமெரிக்காவில் தங்கி இருந்த இவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை வந்திருந்தார். பின்னர் யாஷிகா ஆனந்த், வள்ளிசெட்டி பவானி மற்றும் நண்பர்கள் காரில் வெளியே சென்று விட்டு மாமல்லபுரம் அடுத்த சூளேரிக்காடு என்ற இடத்தில் வரும்போது கார் திடீரென நிலை தடுமாறி சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதியது.
பின்னர் நடுரோட்டில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாஷிகா ஆனந்தின் தோழியான வள்ளிசெட்டி பவானி உயிரிழந்தார்.
பிடிவாரண்டு
இது தொடர்பாக மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்னர். இந்த வழக்கின் மீதான விசாரணை செங்கல்பட்டு குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வரும் இந்த வழக்கில், நேற்று முன்தினம் யாஷிகா ஆனந்த் கோர்ட்டில் ஆஜராக வேண்டும். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து நடிகை யாஷிகா ஆனந்துக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
நாளை (சனிக்கிழமை)க்குள் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்றால் போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.