மதுரை ஐகோர்ட்டில் விசாரணை நேரத்தை முன்கூட்டியே முடிவு செய்யும் வசதி - மக்கள் நீதி மய்யம் வரவேற்பு

வழக்கு விசாரணை நேரத்தை முன்கூட்டியே முடிவு செய்யும் வசதியை மதுரை ஐகோர்ட் அமல்படுத்தியுள்ளதற்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

Update: 2022-07-06 08:41 GMT

சென்னை,

வழக்குகள் விசாரணைக்கு வரும் நேரத்தை முன்கூட்டியே முடிவு செய்யும் வகையில் மதுரை ஐகோர்ட் கிளை கொண்டு வந்துள்ள புதிய நடைமுறைக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-

"ஒரு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டிய நேரத்தை முன்கூட்டியே முடிவு செய்யும் வசதியை மதுரை ஐகோர்ட் கிளை அமல்படுத்தியுள்ளது பெரிதும் வரவேற்கத்தக்கது. உரிய முறையில் திட்டமிட்டு, வழக்குகளை விரைவாக முடிக்க இந்த நடைமுறை உதவியாக இருக்கும்.

விசாரணை நடைபெறும் தேதி, நேரம், வாதிட முன்வைக்கும் சான்றுகள், வழக்குகளின் விவரங்களை முன்கூட்டியே தெரிவிப்பது, வழக்கறிஞர்களுக்கு மட்டுமல்ல, வழக்குத் தொடுப்பவர்கள், எதிர்தரப்பினர் என அனைவருக்குமே பயனளிக்கும். குறிப்பாக, பெண்கள், முதியோரின் சிரமத்தைக் குறைக்கும்.

இந்திய கோர்ட்டுகளில் அனைத்திலுமே இந்த நடைமுறையை தாராளமாகப் பின்பற்றலாம். தாமதமாக வழங்கப்படும் நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம் என்பார்கள். பல லட்சம் வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள நிலையில், இதுபோன்ற மாற்றங்கள் நீதித்துறையில் வரவேற்கத்தக்கவை."

இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்