விலகி வரும் கொரோனா அச்சம்; முககவசம் அணிய தேவையா? வேண்டாமா?

கொரோனா அச்சம் விலகி வரும் நிலையில் முககவசம் அணிய தேவையா? வேண்டாமா? என்று டாக்டர்கள், மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Update: 2022-10-21 16:27 GMT

கொரோனா என்ற கொடிய வைரசுக்கு கடந்த 2020-ம் ஆண்டு கால கட்டத்தில் உலகமே அலறியது. சீனாவில் உதயமான இந்த வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்து விட்டது. தமிழகத்தில் இந்த வைரஸ் ஊடுருவியபோது மக்கள் உயிர் பயத்தில் முககவசம் அணிதல், கிருமி நாசினி மூலம் கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற தற்காப்பு நடவடிக்கைகளை தாரக மந்திரம் போன்று கடைபிடித்தனர். ஒரே நேரத்தில் சிலர் 2 முககவசங்களை அணிந்தனர். ஏராளமான கிராமங்களில் சோதனை சாவடிகள் அமைத்து வெளிநபர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டன. அந்த அளவுக்கு உயிர் பயத்தை காட்டியது கொரோனா.

அச்சம் விலகிவிட்டது

இந்த வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகளும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டன. முககவசம் அணியாமல் அலட்சியம் காட்டிய மக்களிடம் அபராதம் விதிக்கும் அதிரடி நடவடிக்கையை அரசு கையில் எடுத்தது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்த தொடங்கிய பின்னர் கொரோனாவின் கொட்டம் அடங்கிப்போனாலும், இன்னும் முழுமையாக ஒழியவில்லை. தினந்தோறும் இந்த தொற்று பாதிப்பு இருந்து வருகிறது.

கொரோனாவுக்கு கொத்துக்கொத்தாக மனித உயிர்கள் மடிந்தநேரத்தில், கொரோனா என்ற பெயரை கேட்டாலே மக்கள் மத்தியில் பீதியும், அச்சமும் நிறைந்து இருந்தது. தற்போது கொரோனாவின் வீரியம் குறைந்து போனதால், மக்கள் மத்தியில் அச்சம் விலகிவிட்டது. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் முககவசம் கட்டாயம் என்ற கட்டுப்பாடு காலாவதியாகி போனது. அரசின் அபராத நடவடிக்கைகளும் அடங்கிப்போனது. இதனால் முககவசம் அணிபவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.

அலட்சியபோக்கு

தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய கால கட்டத்தில் முககவசம், கிருமி நாசினி (சானிடைசர்) விலை கிடுகிடுவென உயர்ந்தது. இவற்றை விற்பனை செய்யும் கடைகளின் எண்ணிக்கை பெருகத்தொடங்கியதும் விலை குறையத் தொடங்கியது. கொரோனாவுக்கு முன்பு மருந்து கடைகளில் மட்டுமே முககவசம் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கொரோனா பரவத் தொடங்கிய நேரத்தில் மளிகை கடைகள், காய்கறி கடைகள், ஜவுளிக்கடைகள், டீக்கடைகளிலும் கூட முககவசம் விற்பனை செய்யப்பட்டன. முககவசம் விற்பனை செய்வதற்காகவே சாலையோர தள்ளுவண்டி கடைகள் புதிது புதிதாக முளைத்தன. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்கு தேவையான முககவசம், கையுறை, சானிடைசர் போன்றவை விற்பனை செய்வதற்காகவே தனியாக கடைகள் திறக்கப்பட்டன. அங்கு விற்பனையும் மும்முரமாக நடந்தன.

தற்போது கொரோனா அச்சம் விலகியதால் இதுபோன்ற பொருட்கள் விற்பனையில் பலத்த அடி விழுந்தது. முககவசம் விற்பனை செய்ய சாலையோரம் முளைத்த கடைகளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

கொரோனாவுக்கு இன்னும் முடிவு கட்டப்படாத நிலையில், இன்புளுயன்சா போன்ற வைரஸ்களும் மிரட்டுகிறது. இந்த நோய் கிருமியில் இருந்து தப்பிக்கும் கேடயமாக முககவசம் இருந்தாலும், இதனை பெரும்பாலான மக்கள் கடைபிடிக்காமல் அலட்சியபோக்குடன் உள்ளனர்.

தற்போது முககவசம் அணிபவர்கள், அணியாதவர்களின் மனநிலை என்ன என்பதை பார்ப்போம்.

முககவசம் அணிவது பாதுகாப்பானது

மனோகரன் (அரிசி வியாபாரி, போடி):- கடைக்கு தினமும் மக்கள் வந்து செல்கிறார்கள். கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதே தவிர தொற்று பரவல் மொத்தமாக நின்றுவிடவில்லை. ஒன்றும் இரண்டுமாக வந்த பாதிப்பு தான் கோடிக்கணக்கான மக்களை தொற்றியது. எனவே, முககவசம் அணிவதை நான் இன்னும் கைவிடவில்லை. ஆரம்பத்தில் முககவசம் அணியும் போது வித்தியாசமாக உணர்ந்தேன். இப்போது அது பழகிவிட்டது. கூட்டம் கூடும் இடங்களில் முககவசம் அணிந்து கொள்வது பாதுகாப்பானது. கொரோனா மட்டுமின்றி பிற வைரஸ் பாதிப்பு, சுற்றுச்சூழல் மாசுபாட்டில் இருந்தும் முககவசம் பாதுகாப்பாக உணர வைக்கிறது.

பிரியா (இல்லத்தரசி, கம்பம்):- கொரோனா பரவிய காலகட்டத்தில் முககவசம் கட்டாயம் அணிந்தோம். இப்போது பாதிப்பு பெரிதாக இல்லை. தடுப்பூசியும் செலுத்திக்கொண்டதால், முககவசம் தேவைப்படவில்லை. அடிக்கடி முககவசம் அணிந்தால் மூச்சு விடுவதற்கே சிரமம் ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதனால், இப்போது முககவசம் அணிவது இல்லை.

இயல்பான வாழ்க்கை

ஆர்த்தி (தேவாரம் எரணம்பட்டி):- கொரோனா வேகமாக பரவிய காலத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றாலும் முககவசம் அணிய வேண்டிய நிலை இருந்தது. தற்போது எங்கும் முககவசம் அணிவதை பார்க்க முடியவில்லை. அதனால், பெரும்பாலும் முககவசம் அணிவது இல்லை. மருத்துவமனை போன்ற இடங்களுக்கு செல்லும் போது மட்டும் முககவசம் அணிந்து கொள்கிறேன். பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள். இனிமேல் கொரோனா முன்பு பரவியது போன்ற பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்பதால், கொரோனாவுக்கு முந்தைய இயல்பான வாழ்க்கையை வாழப் பழகுகிறோம்.

முருகன் (மருந்தக உரிமையாளர், தேனி):- கொரோனா பரவல் அதிகரித்த போது முககவசம் விற்பனை அதிக அளவில் இருந்தது. தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் மொத்தமாகவும், சில்லரையாகவும் முககவசம் வாங்கிச் செல்வார்கள். சானிடைசர், கையுறை போன்றவை விற்பனையும் அதிக அளவில் இருந்தது. முதல் அலை தீவிரம் அடைந்த போது சானிடைசர் தட்டுப்பாடு ஏற்படும் அளவுக்கு விற்பனை இருந்தது. ஆனால், இப்போது மக்கள் முககவசம் அணிவதையே பார்க்க முடியவில்லை. தினமும் ஓரிருவர் தான் முககவசம் வாங்கிச் செல்கின்றனர். கிருமி நாசினி விற்பனையும் அடியோடு படுத்துவிட்டது. ஏற்கனவே வாங்கி வைத்த முககவசம், சானிடைசர் போன்றவை தேக்கம் அடைந்துள்ள நிலையில் புதிதாக ஆர்டர் கொடுப்பதை நிறுத்திக்கொண்டேன்.

டாக்டர்கள் அறிவுரை என்ன?

ஆரம்பத்தில் உயிர்க்கொல்லி நோயாக கருதப்பட்ட கொரோனா இன்றைக்கு சாதாரண காய்ச்சல் போன்று உடனடியாக குணப்படுத்தக்கூடிய நோயாக உள்ளதால் மக்களிடம் கொரோனா பற்றிய கவலையும், பயமும் போய்விட்டது. இனி முககவசம் தேவையில்லை என்ற மனநிலைக்கு பெரும்பாலான மக்கள் வந்து விட்டார்கள். கொரோனா வைரஸ் கிருமி உருமாறும் தன்மை கொண்டது. உருமாறும் வைரஸ் தொற்று வீரியம் அடைந்தால் அசுர வேகத்தில் பரவும் ஆபத்து உள்ளதாக ஏற்கனவே மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, கொரோனா கிருமி இந்த பூமியில் இருந்து ஒழிந்து விட்டது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரையில் பொது இடங்களுக்கு செல்லும் போது முககவசம் முக்கியம் என்பது டாக்டர்களின் அறிவுரையாக உள்ளது.

முககவசம் அணிவது இன்றியமையாதது

முககவசம் அணிவதன் அவசியம் குறித்து தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் மீனாட்சிசுந்தரம் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ளதால், மக்களிடம் முககவசம் அணியும் பழக்கமும் குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் மட்டுமல்ல எந்த ஒரு வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவும் முககவசம் அணிவது இன்றியமையாதது. முககவசம் அணியாத மனிதர்கள் தங்களை தாங்களே தொற்று அபாயத்துக்கு உட்படுத்திக்கொள்கிறார்கள். முககவசம் அணிவது கட்டாயம் என்ற நிலை மாறினாலும், முககவசம் அணிவது தேவையானது என்ற நிலை இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

முககவசம் அணிவதால் சில சிரமங்கள் இருப்பதாக மக்கள் கருதினால், கூட்டம் கூடும் இடங்களில் முககவசம் அணிய வேண்டும். குறிப்பாக 10 நபர்களுக்கு மேல் இருக்கும் இடங்கள், மூடப்பட்ட அரங்குகள், குளிர்சாதன வசதியுள்ள இடங்களில் முககவசம் அணிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு முககவசம் அணிவது நம்மை எந்த நோய் தொற்றில் இருந்தும் பாதுகாக்கும். தற்போது தீபாவளி பண்டிகை காலம் என்பதால் கடைவீதிகளுக்கு செல்லும் மக்கள் முககவசம் அணிவது நல்லது. புகையினால் ஏற்படும் மாசுபாட்டில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவும் முககவசம் உதவுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்