அடுத்த ஒரு மணி நேரத்தில் மாண்டஸ் புயலின் கண் பகுதி கரையைக் கடக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

கனமழை மற்றும் சூறாவளி காரணமாக சென்னை முதல் அரக்கோணம் வரை செல்லும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-12-09 17:01 GMT

சென்னை,

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர புயலான மாண்டஸ் வலுவிழந்து புயலாக மாறி கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த சூழலில் மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடக்கத் துவங்கி உள்ளது. மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயல் கரையை கடந்து வருவதால் 60 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது.

தற்போது மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் இருந்து 60 கி.மீ தொலைவிலும், சென்னை அருகே 95 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் கரையை கடக்கத் தொடங்கி உள்ளதால் சென்னை முழுவதும் பலத்து சூறைக்காற்று வீசி வருகிறது.

மாண்டஸ் புயல் கரையைக் கடந்து வருவதால் சென்னையின் காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

கனமழை மற்றும் சூறாவளி காரணமாக சென்னை முதல் அரக்கோணம் வரை செல்லும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.  

இந்நிலையில் அடுத்த ஒரு மணி நேரத்தில் புயலின் கண் பகுதி கரையைக் கடக்கத் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்