ராமேஸ்வரத்தில் இருந்து திருவாரூர் வழியாக சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்
ராமேஸ்வரத்தில் இருந்து திருவாரூர் வழியாக சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில்
அப்துல்கலாம் பெயரில் ராமேஸ்வரத்தில் இருந்து திருவாரூர் வழியாக சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும் என திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளருக்கு மனு அளிக்கப்பட்டது.
அப்துல்கலாம் பெயரில்
திருவாரூர் ரெயில் உபயோகிப்பாளர் சங்க பொதுச்செயலாளர் பாஸ்கரன் திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகனிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
டாக்டர் அப்துல்கலாம் பெயரில் ராமேஸ்வரத்தில் இருந்து காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர் வழியாக சென்னைக்கு இருமார்க்கத்திலும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க வேண்டும். வருகிற 16-ந்தேதி ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்பவர்கள் வேதாரண்யம், கோடியக்கரை செல்வது வழக்கம்.
காரைக்குடியில் இருந்து திருவாரூருக்கு
எனவே திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி ரெயிலை திருவாரூரில் இருந்து இயக்கினால் அதிகமானோர் பயன் அடைவார்கள். காலை 8.20 மணிக்கு திருவாரூரில் இருந்து காரைக்குடிக்கு செல்லும் ரெயிலுக்கு இணையாக காரைக்குடியில் இருந்து திருவாரரூருக்கு காலை 9 மணிக்கு வருவது போல் ஒரு ரெயில் இயக்க வேண்டும். இது மன்னார்குடி-மயிலாடுதுறை செல்லும் ரெயிலுக்கு இணைப்பாக அமையும். திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு மாலை 4.45 மணிக்கு கடைசி ரெயிலாக உள்ளது. எனவே பயணிகளின் வசதிக்காக இரவு 7 மணிக்கு ஒரு ரெயில் இயக்க வேண்டும்.
விழுப்புரத்திற்கு ரெயில் சேவை
விழுப்புரம்-மயிலாடுதுறை ரெயில்களை திருவாரூர் வரை நீட்டிப்பு செய்து, திருவாரூரில் இருந்து விழுப்புரத்திற்கு ரெயில் சேவை ஏற்படுத்த வேண்டும். செகந்திராபாத்-ராமநாதபுரம் மற்றும் எர்ணாகுளம்-திருவாரூர்-வேளாங்கண்ணி வாராந்திர ரெயில்களை நிரந்தரமாக்கி வாரம் இருமுறை இயக்கிட வேண்டும். திருநெல்வேலி-தாம்பரம் சிறப்பு ரெயிலை நிரந்தர சேவையாக மாற்றிட வேண்டும். அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களையும் கொரடாச்சேரி மற்றும் கீழ்வேளூர் ரெயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.