வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும்தென்னை நார் மதிப்பு கூட்டுப்பொருட்கள்

பொருளாதார மந்தத்தால் தென்னைநார் தொழில் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், மதிப்பு கூட்டுப்பொருட்கள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று தேசிய தென்னைநார் கூட்டமைப்பு தலைவர் வலியுறுத்தி உள்ளார்.;

Update:2023-07-20 04:00 IST

பொள்ளாச்சி

பொருளாதார மந்தத்தால் தென்னைநார் தொழில் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், மதிப்பு கூட்டுப்பொருட்கள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று தேசிய தென்னைநார் கூட்டமைப்பு தலைவர் வலியுறுத்தி உள்ளார்.

தென்னை நார் மதிப்பு கூட்டுப்பொருட்கள்

கோவை மாவட்டத்தில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளதால், அதை சார்ந்த தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. தென்னை நார் தொழிற்சாலைகளில் இருந்து வெளிநாடுகளுக்கு தென்னைநார் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையில் உக்ரைன்-ரஷியா போரின் காரணமாக உலக பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் அடிக்கடி நிகழும் விலை ஏற்றம், இறக்கம் காரணமாக தென்னை நார் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக உள்ள பொருட்களை வெளிநாடுகளில் பயன்படுத்த தொடங்கி விட்டனர். எனவே தென்னை நார் மூலம் வீட்டு உபயோக பொருட்கள் போன்ற மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க மத்திய அரசின் கயிறு வாரியம் மானியம் வழங்கி வருகிறது.

இதுகுறித்து தேசிய தென்னைநார் கூட்டமைப்பு தலைவர் கவுதமன் கூறியதாவது:-

ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு

இந்தியா பொறுத்த வரை 23 ஆயிரம் தென்னை நார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. தென்னை நார் தொழில் உலக பொருளாதார பின்னடைவு காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளது. உலக தேவைக்கு ஏற்ப தென்னைநாரில் இருந்து மதிப்பு கூட்டுப் பொருட்கள் தயாரிக்க முடியும். 5 ஆயிரம் பொருட்கள் தென்னை நாரில் உற்பத்தி செய்ய முடியும். அனைத்து பொருட்களும் இயற்கைக்கு சாதகமானது. 125 நாடுகளுக்கு தேங்காய் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மத்திய அரசின் கயிறு வாரியம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஆராய்ச்சிகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. தென்னை நாரில் செய்யப்பட்ட பொருட்கள் அமெரிக்கா, ஐரோப்பிய, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு அதிகமாக தேவைப்படுகிறது.

தேங்காய் நாரில் செய்த தொட்டி வெளிநாடுகளில் பறவை இனங்களுக்கு உணவு வைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் தேங்காய் நாரில் செய்யப்பட்ட பட்டன் வளர்ப்பு பிராணிகளின் கூண்டில் போடப்படுகிறது. இந்த பட்டன் சிறுநீரை உறிஞ்சும் தன்மை கொண்டது. இதனால் துர்நாற்றம் இருக்காது, சுகாதாரம் பாதுகாக்கப்படுகிறது. அந்த பட்டனை எடுத்து செடிகளுக்கு போட்டால், 34 நாட்களில் உரமாகி விடுகிறது. கயிறு வாரியம் மூலம் புதிதாக பொருட்களை தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. தஞ்சாவூரில் நடத்தப்படும் பயிற்சியின் போது ஊக்கத்தொகையும் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும், மாறி, மாறி வெவ்வேறு விதமான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்