ககன்யான் திட்டத்தில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனை..!
பணகுடி அருகே மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனை வெற்றிகரமாக நடந்தது.;
திருநெல்வேலி,
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி மகேந்திரகிரியில் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளது. இங்கு ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் என்ஜின்களின் சோதனை நடைபெறுகிறது.
இங்கு ககன்யான் திட்டத்திற்காக அதாவது, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் என்ஜின் சி.20, இ11, எம்.கே.111 பரிசோதனை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த 29-ந்தேதி சுமார் 25 வினாடிகள் நீடித்த இந்த பரிசோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த நிலையில் இன்று மாலை 3 மணியளவில் 70 வினாடிகள் நிர்ணயிக்கப்பட்டு இந்த கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பரிசோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஞ்ஞானிகளும் அதிகாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.