முன்மாதிரியான திட்டங்களை முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார்; அமைச்சர் சிவசங்கர் பேச்சு

முன்மாதிரியான திட்டங்களை முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார் என்று அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

Update: 2023-05-15 19:57 GMT

தாமரைக்குளம்:

நலத்திட்ட உதவிகள்

அரியலூரில் தமிழக அரசின் சாதனை விளக்க கையேட்டினை வெளியிட்டு, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் பொறுப்பேற்று ஈராண்டு நிறைவு பெற்றதையொட்டி, அரியலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த விவரங்கள் அடங்கிய கையேடு, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 'ஈடில்லா ஆட்சி, ஈராண்டே சாட்சி' என்ற தலைப்பில் உள்ள இந்த கையேட்டில் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த விவரங்கள் முழு தகவல்களுடன் இடம்பெற்றுள்ளது.

மகளிர் உரிமைத்தொகை

மேலும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் 1,034 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 81 லட்சத்து 95 ஆயிரத்து 195 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பெண்கள் கல்வியில் முன்னேற இந்தியாவிலேயே தமிழகத்தில் முதன்முறையாக புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் பயின்று கல்லூரியில் மேற்படிப்பு பயிலும் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோல் வருகிற செப்டம்பர் 15-ந் தேதியன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கக்கூடிய மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தினை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். இத்திட்டத்தால் பெண்கள் மிகுந்த பயன்பெறுவார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்திடாத இதுபோன்ற முன் மாதிரியான மக்கள் நலத்திட்டங்களை முதல்-அமைச்சர் தமிழ்நாட்டில் செயல்படுத்தி வருகிறார். எனவே, தமிழக அரசின் இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்களை பயனாளிகள் உரிய முறையில் பெற்று பயன்பெறுவதுடன் தமிழக அரசுக்கு என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் (பொறுப்பு) முருகண்ணன், வருவாய் கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன் (அரியலூர்), பரிமளம் (உடையார்பாளையம்), மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குமார், அரியலூர் நகர்மன்ற தலைவர் சாந்தி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்