மங்களூர் குண்டு வெடிப்பு-கோவையில் ஷாரிக் தங்கியிருந்த விடுதி உரிமையாளருக்கு போலீசார் சம்மன்

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கோவையில் ஷாரிக் தங்கி இருந்த விடுதி உரிமையாளர் மங்களூரில் நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

Update: 2022-11-26 08:31 GMT

கோவை,

கர்நாடக மாநிலம் மங்களூரு நகர் நாகுரி என்ற பகுதியில் கடந்த 19-ந் தேதி ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவத்தை அரங்கேற்றியது தேடப்பட்டு வந்த பயங்கரவாதி ஷாரிக் (வயது 24) என்பது தெரியவந்தது.

இந்த வழக்கில் கர்நாடக மாநில போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் வழக்கை எடுத்து விசாரணையை துரிதப்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் பயங்கரவாத செயலில் ஈடுபட்ட ஷாரிக் கடந்த செப்டம்பர் மாதம் போலி அடையாள அட்டையை காட்டி கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் 4 நாட்கள் தங்கி இருந்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் ஷாரிக் தன்னை ஒரு இந்து என்ற அடையாளத்துடன் சுற்றித்திரிந்து வந்து உள்ளார்.

கோவையில் ஷாரிக் தங்கி இருந்ததால் கர்நாடக மாநிலம் மங்களூரு தனிப்படை போலீசார் கடந்த ஒரு வாரமாக கோவையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது அவா்கள் கோவை கார் வெடிப்பு வழக்கில் துரித நடவடிக்கை மேற்கொண்ட விதம் குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், கோவை கார் வெடிப்பு வழக்கை தற்போது விசாரித்து வரும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் ஷாரிக் தங்கி இருந்த கோவை காந்திபுரத்தில் உள்ள விடுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு உள்ளூர் போலீசார் உதவியுடன் 4 பேர் கொண்ட மங்களூரு தனிப்படை போலீசார் நேரில் சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு இருந்த விடுதி மேலாளர் முருகன் மற்றும் விடுதி உரிமையாாள் காமராசு ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். அதில் மேலாளர் முருகனுக்கு கன்னடம், ஆங்கிலம் மொழி தெரியும் என்பதால் கர்நாடக மொழியில் ஷாரிக் விடுதியில் எப்போது தங்கினார், அவர் கொடுத்த ஆவணங்கள் என்ன? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கேட்டு அறிந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் அங்கு இருந்த வருகை பதிவேட்டை கைப்பற்றி சென்றனர். இந்த நிலையில் பயங்கரவாதி ஷாரிக் தாங்கி இருந்த விடுதி உரிமையாளர் காமராஜிடம் விசாரணை நடத்துவதற்காக மங்களூரு போலீசில் ஆஜராக இன்று சம்மன் அனுப்பி உள்ளனர். இது கிடைத்த 3 நாட்களில் ஆஜராகுமாறு அதில் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்