ஊருணியில் ஊன்றப்பட்டிருந்த கற்களை பொதுமக்கள் பிடுங்கியதால் பரபரப்பு

செங்கிப்பட்டி அருகே ஊருணியில் ஊன்றப்பட்டிருந்த கற்களை பொதுமக்கள் பிடுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2022-06-02 02:11 IST

வல்லம்

தஞ்சை செங்கிப்பட்டி அருகே தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் அருகே அயோத்திப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் எல்லைக்குட்பட்ட சுமார் 53 ஏக்கர் பரப்பளவிலான இடத்தில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று வீட்டுமனைகளை அமைத்து வருகிறது. அதற்காக அங்கு சாலை அமைக்கும் பணியும், வீட்டுமனைகளை சுற்றி சிமெண்டு கற்களால் வேலி அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதனை அறிந்த கிராமமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த விவசாய சங்கத்தினர் நேற்று கிராமத்தில் ஒன்று திரண்டனர்.

கற்களை பிடுங்கினர்

பின்னர் அவர்கள் அயோதிப்பட்டி பஞ்சாயத்திற்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டு இருந்த சிமெண்டு கற்களை பிடுங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், மாதர் சங்க மாவட்ட தலைவர் தமிழ்செல்வி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பூதலூர் ஒன்றிய செயலாளர் பாஸ்கர், அயோத்திபட்டி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா கார்த்திஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊருணி

வீட்டுமனைகள் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் ஊருணி இருந்ததாகவும், இதனை அதிகாரிகள் அளவீடு செய்து முறைப்படுத்த வேண்டும் என போராட்டக்காரர்கள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.இதுகுறித்து மேல் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டதன்பேரில், போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.





Tags:    

மேலும் செய்திகள்