மாட்டின் உடல் பாகங்கள் தோண்டி எடுத்து அகற்றம்

திண்டுக்கல் காங்கிரஸ் கட்சி அலுவலக வளாகத்தில் புதைக்கப்பட்ட மாட்டின் உடல் பாகங்கள் தோண்டி எடுத்து அகற்றப்பட்டன.

Update: 2023-02-16 16:55 GMT

 மாடு புதைப்பு

திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே, மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம், தனியார் கட்டிடத்தில் செயல்படுகிறது. இந்த கட்டிடத்தின் உரிமையாளர் ராஜாமுகமது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.

அதில், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பசுமாட்டை பலியிட்டு, புதைத்து இருப்பதாக கூறியிருந்தார். ஆனால் விஷ பூச்சி கடித்து இறந்த ஜல்லிக்கட்டு காளையை தான் புதைத்ததாக, காங்கிரஸ் கட்சியின் மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மாட்டின் உடலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்தனர். அதன்படி போலீஸ் பாதுகாப்புடன், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் புதைக்கப்பட்ட மாட்டின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் புதைக்கப்பட்டது பசுவா? அல்லது காளையா? என்பதை கண்டறிய மாட்டின் உடல் பாகங்கள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தோண்டி எடுத்து அகற்றம்

இதற்கிடையே புதைக்கப்பட்ட மாட்டின் உடல் பாகங்களை முழுமையாக தோண்டி எடுத்து அகற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் ராஜாமுகமது மனு தாக்கல் செய்தார்.

அந்த மனு தொடர்பான விசாரணையில், மாட்டின் உடல் பாகங்களை அகற்றி விடுவதாக மணிகண்டன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவுப்படி, மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் புதைக்கப்பட்ட மாட்டின் உடல் பாகங்களை தோண்டி எடுக்கும் பணி நேற்று நடந்தது.

இதில் ராஜாமுகமது மற்றும் மணிகண்டன் ஆகிய இருதரப்பை சேர்ந்தவர்கள் மற்றும் வக்கீல்கள் முன்னிலையில போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரத்தின் மூலம் மாடு புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டது. அப்போது மாட்டின் உடல் பாகங்களை சேர்ந்த எலும்புகள் மற்றும் புதைக்கப்பட்ட இடத்தின் மண் முழுவதும் தோண்டி எடுக்கப்பட்டு அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தால், திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்