தருமபுரி மாவட்டத்தில் 9 மையங்களில் நடந்த 2-ம் நிலை காவலர் எழுத்து தேர்வை 9,844 பேர் எழுதினர்-1,618 பேர் எழுதவில்லை

Update: 2022-11-27 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் 9 மையங்களில் நடந்த 2-ம் நிலை காவலர் எழுத்து தேர்வை 9,844 பேர் எழுதினர். 1,618 பேர் தேர்வு எழுதவரவில்லை.

எழுத்து தேர்வு

தமிழகத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் ஆண், பெண் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர், சிறை காப்பாளர் பணிகளுக்கான எழுத்து தேர்வு 9 மையங்களில் நடந்தது. தேர்வு எழுதுவதற்காக காலை 8 மணிக்கு முன்னரே தேர்வர்கள் அந்தந்த மையங்களுக்கு வந்தனர். அவர்கள் அரசின் விதிமுறைப்படி தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். காலை 10 மணி முதல் மதியம் 12.40 மணி வரை இந்த தேர்வு நடைபெற்றது. ஆண் தேர்வர்களுக்கு அதியமான்கோட்டை செந்தில் பப்ளிக் பள்ளி, நல்லனூர் ஜெயம் தொழில்நுட்ப கல்லூரி, தர்மபுரி அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விஜயநகர் ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம் பள்ளி, பென்னாகரம் ரோடு ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, காந்திநகர் ஸ்ரீ விஜய் வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பச்சமுத்து மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 7 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன.

1,618 பேர் வரவில்லை

பெண் தேர்வர்களுக்கு தர்மபுரி அரசு கலைக் கல்லூரி மற்றும் நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலயா மகளிர் கலைக் கல்லூரி ஆகிய 2 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது. 2-ம் நிலை காவலர் பணிக்கான தேர்வை எழுத 8 ஆயிரத்து 766 ஆண்கள், 2 ஆயிரத்து 696 பெண்கள் என மொத்தம் 11 ஆயிரத்து 462 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 7 ஆயிரத்து 536 ஆண்கள், 2 ஆயிரத்து 308 பெண்கள் என மொத்தம் 9 ஆயிரத்து 844 பேர் தேர்வு எழுதினர். 1,230 ஆண்கள், 388 பெண்கள் என மொத்தம் 1,618 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வையொட்டி அனைத்து மையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஆய்வு

இந்தநிலையில் சென்னை ஆயுதப்படை ஐ.ஜி. ராதிகா தர்மபுரி மாவட்டத்தில் எழுத்து தேர்வு நடைபெற்ற மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதேபோன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாமலை, இளங்கோவன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செந்தில்குமார், சிந்து, ஸ்ரீதரன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் தேர்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்