முன்னாள் ராணுவ வீரர் தூக்குப்போட்டு தற்கொலை

குலசேகரம் அருகே மனைவி கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றதால் முன்னாள் ராணுவவீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-01-02 18:45 GMT

குலசேகரம்:

குலசேகரம் அருகே மனைவி கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றதால் முன்னாள் ராணுவவீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முன்னாள் ராணுவ வீரர்

குலசேகரம் அருகே உள்ள அம்பலத்துவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜப்பன். இவருடைய மகன் அனீஷ் (வயது 33), முன்னாள் ராணுவவீரர். இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை அருகே உள்ள உதயன்குளம்கரை கூழிக்குன்னு பகுதியைச் சேர்ந்த ரேஷ்மா என்ற பெண்ணை முகநூல் வழியாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகள் உள்ளார். அனீசுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததால், கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ரேஷ்மா கணவருடன் கோபித்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு செல்வதும், பிறகு திரும்பி வருவதும் வழக்கம். மேலும், அனீசுடன் வசித்து வந்த தாயாரும் அவரது நடவடிக்கை பிடிக்காததால் அருகில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு சென்று விட்டார்.

தூக்கில் பிணம்

இந்தநிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அனீஷ் மது குடிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து ரேஷ்மா மகளை அழைத்துக் கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்று விட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் அனீஷின் தாயார் அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது போனை எடுக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவர் அனீஷின் வீட்டிற்கு சென்று ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது, அனீஷ் வீட்டிற்குள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இதுபற்றி ரேஷ்மாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தற்கொலை

இதுபற்றி தகவலறிந்த குலசேகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அனீஷின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது, அங்கு அனீஷ் எழுதியிருந்த கடிதம் ஒன்று சிக்கியது. அதில் தனது தற்கொலைக்கு தானேதான் காரணம் என்று எழுதப்பட்டு இருந்தது. போலீசாரின் விசாரணையில் மது பழக்கத்துக்கு அடிமையான அனீஷ், மனைவி பிரிந்து சென்றதாலும், வாழ்க்கையில் வெறுப்படைந்ததாலும் தற்கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து அனீஷின் மனைவி ரேஷ்மா குலசேகரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்