முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்
தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறியுள்ளார்.
நாகர்கோவில்:
தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்ற முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஓய்வூதியம்
விளையாட்டுத் துறையில் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதன்படி மாத ஓய்வூதியம் ரூ.6000 வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற www.sdat.tn.gov.inஎன்ற இணைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று முதலிடம், 2-ம், 3-ம் இடங்களில் வெற்றி பெற்று இருத்தல் வேண்டும்.
மத்திய அரசால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகள், அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளங்களால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள், மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றவராக இருக்க வேண்டும்.
மாத வருமானம்
31-1-2023 அன்றுடன் 58 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் தமிழகத்தைச் சார்ந்தவராகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6,000-ல் இருந்து ரூ.15,000-க்குள் இருத்தல் வேண்டும்.
மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் அல்லது மாநில அரசின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதியில்லை. முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறத் தகுதியில்லை. விண்ணப்பத்துடன் தங்களது சுய விவரம் மற்றும் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையதளத்தில் தங்களது பதிவேற்றத்தினை 19-4-2023 அன்று மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.