பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் - கலெக்டர் பேட்டி
பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கத்தின் கீழ் முதல்முறையாக அமைக்கப்பட்ட மஞ்சப்பை விற்பனை எந்திரத்தின் செயல்பாட்டை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த மஞ்சப்பை விற்பனை எந்திரத்தில் ரூ.10 செலுத்தி ஒரு மஞ்சப்பை பெற்று கொள்ளலாம். திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக உள்ள மஞ்சப்பை உபயோகம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து முதல் முறையாக மஞ்சப்பை வழங்கும் எந்திரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் திருவள்ளூர் அலுவலகத்திலும் நிறுவப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. எனவே இனிவரும் காலங்களில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மஞ்சப்பையை பயன்படுத்தி பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத திருவள்ளூர் மாவட்டத்தை உருவாக்க அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் சம்பத்குமார், உதவி பொறியாளர்கள் ரகுகுமார், சபரிநாதன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.