இன்றும் பெண்களின் அதிகாரம் பறிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது - பிரியங்கா காந்தி பேச்சு

இன்றும் பெண்களின் அதிகாரம் பறிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது என்று திமுக மகளிர் உரிமை மாநாட்டில் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

Update: 2023-10-14 14:13 GMT

சென்னை,

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டை ஒட்டி திமுக மகளிர் அணி சார்பில் இந்த மகளிர் உரிமை மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மெகபூபா முப்தி, சுப்ரியா சுலே உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள பல்வேறு பெண் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் இந்த மகளிர் உரிமை மாநாட்டில் பேசிய பிரியங்கா காந்தி, நீங்கள் தான் என் தாய், என் சகோதரி; இங்கே இருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன் என்று தமிழில் உரையைத் தொடங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

பெண்களே இந்தியாவின் தூண்கள். பெண்களின் செயல்திறனே தேசத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்லும். பெண்களை மையமாக வைத்து தான் குடும்பம் என்பது கட்டமைக்கப்படுகிறது. இன்றும் பெண்களின் அதிகாரம் பறிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. பெண்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

சமூக மாற்றத்திற்கான புரட்சி இங்கே தான் உருவானது. பெண்கள் ஏன் அடிமையாகவே இருக்கிறார்கள் என்ற பெரியாரின் கேள்வி தற்போதும் நீடிக்கிறது. முழுமையான சமத்துவத்தை பெற நாம் இன்னும் உழைக்க வேண்டும். மாற்றத்திற்கான சரியான தளத்தில் இப்போது நாம் அனைவரும் நின்று கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்