வடிவிழந்து வரும் சுடுமண் சிற்ப கலை

சிற்பக்கலையில் பெயர்பெற்றவர்கள் தமிழர்கள். கல், மண், மரம், உலோகம் என அனைத்திலும் சிற்பங்கள் வடித்து புகழ் பெற்றவர்கள்.

Update: 2023-02-06 18:04 GMT

களிமண்ணிலும் உருவம் படைத்து கலை வண்ணம் காணும் தொன்மையான சிற்பக்கலையை இன்னும் அழியாமல் பாதுகாத்து வரும் பலர் தமிழகத்தில் இருக்கிறார்கள். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுடுமண் சிற்ப கலை மிகவும் பிரசித்தி பெற்றது.

சுடுமண் சிற்பங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மண்பாண்ட தொழிலில் அதிக அளவில் தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர். கறம்பக்குடி, குசலாக்குடி, மழையூர், மகிலாங்கிபட்டி, நரங்கிபட்டு, பெரம்பூர், வைத்திக்கோவில், கைக்குறிச்சி, அறந்தாங்கி, விராலிமலை, பொன்னமராவதி, காராகுடி, துவரடிமனை, கீழ்குடி உள்ளிட்ட பகுதிகளில் இத்தொழில் காணப்படுகிறது.

இதில் சுடுமண் சிற்பங்களும் செய்யப்படுகிறது. சாமி சிலைகள், குதிரை, யானை, மாடு உள்ளிட்ட உருவங்களும் சுடுமண் சிற்பங்களை தத்ரூபமாக கலைஞர்கள் வடிவமைக்கின்றனர்.

இதில் மழையூர், கீழ்குடி, துவரடிமனை, காராகுடி பகுதியில் செய்யப்படும் சுடு மண் சிற்பங்கள் மிகவும் பெயர் பெற்றவையாகும்.

வெளிநாடுகளுக்கு செல்லும் கலைஞர்கள்

மழையூர் மண் சிற்பம் இந்தியா முழுவதும் புகழ் பெற்றது. இங்கு 108 பரிவார தெய்வங்கள் சுடுமண் சிற்பத்தால் செய்யப்படும். இதுதவிர யானை, குதிரை, மாடு, மனிதர்கள் உருவம் போன்றவையும் வடிவமைக்கப்படும். மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 18 வெளிநாடுகளுக்கு இங்கிருந்து கலைஞர்கள் சென்று சிற்பங்களை வடிவமைத்து கொடுத்து வந்துள்ளனர். நமது ஜனாதிபதி மாளிகையில் கூட மழையூர் மண்பாண்ட கலைஞரின் கைவண்ணத்தில் உருவான மண் சிற்பம் உள்ளது.

இங்கு ஏராளமானோர் இத்தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

மேலும் சுடுமண் சிற்பகலை தற்போது நலிவடைந்து வருகிறது. இதனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

சக்திவேல்:- தற்போது சுடுமண் சிற்ப கலையில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு போதுமான வசதிகள் எதுவும் இல்லை.

தொழிற்கூடம் என்பது இல்லாமல் உள்ளது. ஊரில் சாலை வசதி இல்லை. இந்த சிற்ப கலையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து கொடுத்து இத்தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதில் வருவாய் போதுமானதாக இல்லாத காரணத்தினால் பலர் இத்தொழிலில் ஈடுபடுவதை கைவிட்டனர். இதனால் வெளிநாட்டில் கூலித்தொழிலாளியாக வேலைக்கு செல்கின்றனர். பரம்பரையாக செய்து வரும் இத்தொழில் அழியும் நிலையில் உள்ளது.''

நிவாரணம்

சீதாலட்சுமி:- மண் சிற்பங்கள் தயாரிக்க முக்கியமான களிமண் எடுக்க போதிய அனுமதி அளிக்கப்படுவதில்லை. மழைக்காலங்களில் ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். அந்த நிவாரணம் தற்போது வழங்கப்படுவதில்லை. இதனால் சிற்பங்கள் தயாரிப்பு தொழில் என்பது குறைந்து வருகிறது. தற்போது உள்ள தலைமுறையினர் இத்தொழிலில் ஈடுபட அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை.

சிதம்பரம்:- மழையூரில் மண்பாண்டம் மற்றும் சிற்ப தொழிலுக்காக தொழிற் கூடம் கட்டிக்கொடுக்கப்பட்டது. அந்த கட்டிடம் சில ஆண்டுகளுக்கு முன் சுழற்றியடித்த கஜா புயலில் சேதமடைந்த பின் சீரமைக்கப்படவில்லை. புதிதாக தொழிற்கூடம் கட்டித்தர வேண்டும். மண் பாண்ட தொழிலில் ஈடுபடுவர்களுக்கு மண் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும்.

சலுகைகள் தேவை

ராஜா:- மண்பாண்ட தொழிலாளர்களை நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்குரிய நலத்திட்டங்களை முழுமையாக கிடைக்க வேண்டும். சிறப்பு முகாம்கள் நடத்தி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இத்தொழிலை ஊக்கப்படுத்த வேண்டும். அரசு தரப்பில் பல சலுகைகள் கிடைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

பல பிரச்சினைகளால் வடிவிழந்து வரும் சுடுமண் சிற்ப கலையை அரசு மீட்ெடடுத்து மறுஉருவம் கொடுக்க வேண்டும் என்பது அனைவரின் வேண்டுகோளாக இருக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்