ஈரோடு வ.உ.சி.பூங்கா ஈத்கா மைதானத்தில்ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்மாவட்ட அரசு தலைமை காஜி முகமது கிபாயத்துல்லா தலைமையில் நடந்தது
ஈரோடு வ.உ.சி.பூங்கா ஈத்கா மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்
ஈரோடு வ.உ.சி.பூங்கா ஈத்கா மைதானத்தில் மாவட்ட அரசு தலைமை காஜி முகமது கிபாயத்துல்லா தலைமையில் நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்.
நோன்பு
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. நபிகள் நாயகமாக விளங்கும் முகமது நபிக்கு புனித குரான் அருளப்பட்ட மாதமாக ரம்ஜான் மாதம் உள்ளது. ரம்ஜான் பண்டிகையை ஈகைத்திருநாளாக முஸ்லிம்கள் கொண்டாடி வருகிறார்கள்.
30 நாட்கள் நோன்பு இருந்து ரம்ஜான் விரதம் கடைபிடித்த முஸ்லிம்கள் புனித குரானில் உள்ள 6 ஆயிரத்து 666 வசனங்களையும் 30 -ஆக பிரித்து தினமும் வாசித்து (ஓதி) வந்தனர். பள்ளிவாசல்களில் தினமும் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டு வந்தன. நோன்பு திறப்பு நேரத்தில் பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சி வழங்கும் நிகழ்ச்சிகளும் நடந்தன.
சிறப்பு தொழுகை
நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஈரோடு வ.உ.சி.பூங்காவில் அமைந்து உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நேற்று நடந்தது. காலை 9 மணி முதல் முஸ்லிம்கள் தொழுகைக்காக ஈத்கா மைதானத்துக்கு வந்தனர். அங்குள்ள குளத்தில் கை-கால்களை சுத்தம் செய்து, பந்தலுக்குள் அமர்ந்தனர்.
ஈரோடு மாவட்ட அரசு தலைமை காஜி முகமது கிபாயத்துல்லா தலைமையில் சிறப்பு தொழுகை நடந்தது. ரம்ஜான் பண்டிகையின் நோக்கம், ரம்ஜான் பண்டிகையின் போது முஸ்லிம்கள் கட்டாயமாக கடைபிடிக்க வேண்டிய கடமைகள், சதகத்துல் பித்ரு எனப்படும் ரம்ஜான் ஈகை வழங்க வேண்டியதன் அவசியம் உள்ளிட்டவை குறித்து தலைமை காஜி முகமது கிபாயத்துல்லா விளக்க உரையாற்றினார். தொடர்ந்து சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று தொழுகையை நிறைவேற்றினார்கள்.
வாழ்த்து
ரம்ஜான் சிறப்பு தொழுகையில் சிறுவர்- சிறுமிகளும் பங்கேற்றனர். தொழுகை முடிந்ததும் முஸ்லிம்கள் ஒருவருக்கு ஒருவர் ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். பலரும், யாசகர்களுக்கு உதவிகள் வழங்கிச்சென்றனர்.
முஸ்லிம்கள் புத்தாடைகள் அணிந்து ரம்ஜான் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். வீடுகளில் பிரியாணி சமைத்து பிற மதங்களை சேர்ந்த நண்பர்களுக்கும் கொடுத்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.