சொந்த ஊர் சென்று திரும்பியதால் ஈரோடு ரெயில், பஸ் நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

சொந்த ஊர் சென்று திரும்பியதால் ஈரோடு ரெயில் மற்றும் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.;

Update:2023-10-26 03:31 IST

சொந்த ஊர் சென்று திரும்பியதால் ஈரோடு ரெயில் மற்றும் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

ஆயுதபூஜை

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் தங்கி பல்வேறு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ஆயுதபூஜை, புது வருடப்பிறப்பு போன்ற விசேஷ நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இந்த நேரத்தில் ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியையொட்டி கடந்த 22 மற்றும் 23-ந்தேதி விடுமுறை ஆகும். மேலும் முந்தைய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறையாக வந்தது. இதனால் ஈரோட்டில் உள்ள வெளி மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் சொந்த ஊருக்கு சென்று ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை கொண்டாடினர்.

அலைமோதிய பயணிகள் கூட்டம்

பூஜை முடிவடைந்ததை தொடர்ந்து அவர்கள் ஈரோடு மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் முதல் வரத்தொடங்கினர். நேற்று காலை அதிகமானோர் ஈரோட்டுக்கு வந்ததால் ஈரோடு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சேலம், கோவை செல்லும் பஸ்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.

இதேபோல் மதுரை, நெல்லை செல்லும் பஸ்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் ஈரோடு ரெயில் நிலையத்திலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு பெட்டிகள் அனைத்தும் நிரம்பி விட்டன. முன்பதிவு இல்லாத பெட்டிகளில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர். குறிப்பாக நாகர்கோவிலில் இருந்து ஈரோடு வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இதன் காரணமாக நேற்றும் ஈரோடு ரெயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்