ஈரோடு கே.கே.நகர்ரெயில்வே பாலம் பகுதியில் மீண்டும் பராமரிப்பு பணிபோக்குவரத்து மாற்றம்

ஈரோடு கே.கே.நகர் ரெயில்வே பாலம் பகுதியில் மீண்டும் பராமரிப்பு பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2023-05-10 21:01 GMT

ஈரோடு கே.கே.நகர் ரெயில்வே பாலம் பகுதியில் மீண்டும் பராமரிப்பு பணி தொடங்கி உள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

பராமரிப்பு பணி

ஈரோட்டில் இருந்து ரங்கம்பாளையம் வழியாக சென்னிமலை செல்லும் பிரதான ரோடு உள்ளது. இந்த ரோட்டில் ரங்கம்பாளையத்துக்கு முன்பாக, கே.கே.நகர் பகுதியில் ரெயில்வே நுழைவு கீழ்பாலம் உள்ளது. இந்த பாலம் மிகவும் குறுகியதாகவும், ரோடு முற்றிலும் சேதம் அடைந்து, தண்ணீர் தேங்கி காணப்படும். இதனால் சிறிய மழை பெய்தாலும், விபத்து ஏற்பட்டாலும், அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படும்.

இதன் காரணமாக இந்த ரோட்டை பராமரித்து, கீழ்பாலத்தில் தண்ணீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து கடந்த மாதம் பாலத்தின் ஒரு பகுதியை நெடுஞ்சாலை துறையினர் பராமரிப்பு பணி செய்து, தண்ணீர் தேங்காமல் இருக்கும் வகையில் பணியை முடித்தனர். இதனால் ஒரு மாதமாக அந்த வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. கடந்த வாரம் பணி முடிந்து, வாகன போக்குவரத்துக்கு தொடங்கியது.

10 நாட்கள்...

இந்த நிலையில் நேற்று, பாலத்தின் மற்றொரு பக்கம் பராமரிப்பு பணி தொடங்கியது. இதன் காரணமாக அந்த வழியாக இருசக்கர வாகனங்கள் தவிர மற்ற வாகனங்கள் செல்ல முடியாதபடி, தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளன. இன்னும், 10 நாட்களில் பராமரிப்பு பணியை முடிக்க திட்டமிட்டு பணிகள் நடந்து வருகிறது. இதனால் கார்கள், ஆட்டோ ஆகியவை கே.கே.நகர் பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மண் சாலை வழியாக சென்று வருகின்றனர்.

பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள், சூரம்பட்டி 4 ரோடு, சூரம்பட்டி வலசு, மகாராஜா தியேட்டர் பின்புறம் வழியாக சென்று திரும்பி, நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் அருகே சென்று, மற்றொரு ரெயில்வே கீழ்பாலம் வழியாக டாக்டர் ஆர்.ஏ.என்.எம். கல்லுாரி வழியாக ரங்கம்பாளையம் சென்று அங்கிருந்து சென்னிமலை செல்கிறது. இந்த பணி நடப்பது தெரியாமல், பல வாகன ஓட்டிகள் ரெயில்வே கீழ்பாலம் வரை சென்று மாற்று பாதைக்கு திரும்பியதை நேற்று காணமுடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்