அனல் பறக்கும் ஈரோடு அரசியல் களம்தி.மு.க. அமைச்சர்கள்- அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் முற்றுகையிட்டு பிரசாரம்;சாலையோர கடையில் டீ குடித்த முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

இடைத்தேர்தலையொட்டி ஈரோடு தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. தி.மு.க. அமைச்சர்கள், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஈரோட்டை முற்றுகையிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாலையோர கடையில் டீ குடித்தார்.

Update: 2023-02-08 21:49 GMT

இடைத்தேர்தலையொட்டி ஈரோடு தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. தி.மு.க. அமைச்சர்கள், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஈரோட்டை முற்றுகையிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாலையோர கடையில் டீ குடித்தார்.

பிரசார களம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனுதாக்கல் முடிந்து மனுக்கள் பரிசீலனை முடிந்து விட்டது. தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அ.தி.மு.க.வின் ஒரே வேட்பாளராக கே.எஸ்.தென்னரசுவும் போட்டியிடுவது உறுதியாகி விட்டது.

எனவே பிரசார களம் அனல் பறக்க தொடங்கி உள்ளது. தி.மு.க. சார்பில் முக்கிய அமைச்சர்கள் பலரும் ஈரோட்டிலேயே முகாம் அமைத்து தங்கள் பிரசாரத்தை செய்து வருகிறார்கள். 4 அல்லது 5 வார்டுகளுக்கு ஒரு அமைச்சர் என்ற வகையில் குழு அமைக்கப்பட்டு பணிகள் தீவிரம் அடைந்து உள்ளன. அமைச்சர்களுடன், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க. முக்கிய பிரமுகர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகளும் வந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவ-மாணவிகளை கவரும் வகையில் அமைச்சர்களின் பல்வேறு நடவடிக்கைகள் அமைந்து உள்ளன. பெண்களை ஈர்க்கும் வகையில் திண்ணை பிரசாரம் செய்து வாக்காளர்களை உற்சாகப்படுத்தியும் வருகிறார்கள்.

அமைச்சர்கள் உறுதி

அமைச்சர்களுடன் செல்பி எடுக்க ஏராளமானவர்கள் வந்தாலும், அவர்கள் புன்னகையுடன் அனைவருக்கும் போஸ் கொடுத்து கவர்ந்து வருகிறார்கள். ஓட்டு கேட்டு செல்லும் இடங்களில் மக்களின் குறைகளையும் கவனமுடன் கேட்டு தேர்தல் முடிந்ததும் நிவர்த்தி செய்து தருவதாக அமைச்சர்கள் நேரடியாக உறுதி அளித்து வருகிறார்கள்.

அமைச்சர்கள் சு.முத்துசாமி, கே.என்.நேரு, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ஆர்.சக்கரபாணி, வி.செந்தில்பாலாஜி, ஆர்.காந்தி, பி.கே.சேகர்பாபு, எஸ்.எம்.நாசர், மு.பெ.சாமிநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், சி.வி.கணேசன், கா.ராமச்சந்திரன், கீதா ஜீவன், கயல்விழி செல்வராஜ் என்று அமைச்சர்கள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள். தொண்டர்களுடன் தொண்டர்களாக சென்று காங்கிரஸ் கட்சியினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.

முன்னாள் அமைச்சர்கள்

இதுபோல் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுக்கு வாக்குகள் கேட்டு அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் ஈரோட்டை முற்றுகையிட்டு உள்ளனர். முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க.வின் மூத்த தலைவருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தலைமையில் முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான கே.வி.ராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் பணிகளை செய்து வருகிறார்கள். முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ராஜேந்திரபாலாஜி, கே.சி.கருப்பணன் உள்ளிட்டோர் ஈரோட்டில் இருந்து பல்வேறு பகுதிகளிலும் ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

இந்தநிலையில் நேற்று முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக வில்லரசம்பட்டிக்கு வந்தார்.

அங்கு பொது அமைப்புகளை சேர்ந்த சில நிர்வாகிகளையும் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.

சாலையோர கடையில் டீ

பின்னர் அவரது நண்பர்களும் ஆதரவாளர்களுமான முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளுடன் வில்லரசம்பட்டி நால்ரோடு வந்தார். அங்கு சாலையோரத்தில் உள்ள பேக்கரி கடைக்கு சென்றார். அனைவருக்கும் டீ ஆர்டர் செய்து, பொதுமக்கள் உட்காரும் பெஞ்சில் உட்கார்ந்து டீ ருசித்து குடித்தார். அவர் அருகில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உட்கார்ந்து இருந்தார். தேர்தல் தொடர்பாக அவர் கூறிய ஆலோசனைகளை எடப்பாடி பழனிசாமி உன்னிப்பாக கேட்டுக்கொண்டே டீயையும் பருகினார். மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம், மண்டல தலைவர் ரா.மனோகரன் ஆகியோர் யாருக்கு சர்க்கரை போட்ட டீ, யாருக்கு சர்க்கரை போடாத டீ என்று கேட்டு வாங்கி கொடுத்தனர். நிகழ்ச்சியில் வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு உடன் இருந்தார். த.மா.கா. மாநில பொதுச்செயலாளர் விடியல் எஸ்.சேகர், இளைஞர் அணி மாநில தலைவர் எம்.யுவராஜா, மாவட்ட தலைவர் விஜயகுமார், முன்னாள் மேயர் கே.சி.பழனிச்சாமி உள்பட பலரும் இருந்தனர்.

அனல் பறக்கிறது

இவ்வாறு ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் போட்டிப்போட்டுக்கொண்டு பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள தி.மு.க., அ.தி.மு.க.வினர் ஈரோடு நோக்கி படை எடுத்து வருவதால், ஈரோட்டில் வாகன நெருக்கடி அதிகமாகி இருக்கிறது. சாலையில் தடை இன்றி செல்லும் வாகனங்களை பார்த்து பொதுமக்கள் மிரண்டுபோய் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள அத்தனை காரும் ஈரோட்டில்தான் இருக்கிறது என்று சமூக வலைதளங்கள், இணையங்களில் மீம்ஸ் வைரல் ஆகி வருகிறது. அந்த அளவுக்கு ஈரோடு தேர்தல் பரபரப்புக்குள் சிக்கிக்கிடக்கிறது. இன்னும் தேர்தலுக்கு 18 நாட்கள் இருக்கும் நிலையில் இப்போதே தேர்தல்களம் அனல் பறக்க தொடங்கி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்