ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: உரிய ஆவணம் இல்லாத ரூ.5½ லட்சம் பறிமுதல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து சென்றதாக ரூ.5½ லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-02-07 20:44 GMT

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரோட்டில் கடந்த 20-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 15 பேரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டதாக ரூ.16 லட்சத்து 97 ஆயிரத்து 840 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நிலை கண்காணிப்பு குழுவினர் கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரில் ஈரோடு மூலப்பாளையத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர் நவநீதன் (வயது35) என்பவர் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ரூ.2 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்.

தறிப்பட்டறை உரிமையாளர்

ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் அதிகாரிகளின் இந்த சோதனையின்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரிடம் ரூ.3 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சீராம்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (41) என்பதும், ஈரோட்டில் சொந்தமாக தறிப்பட்டறை வைத்து நடத்தி வருவதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்டதாக ரூ.3 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள்.

இதேபோல் நேற்று காலை, பி.பி.அக்ரஹாரம் பவானிரோட்டில் மோட்டார்சைக்கிளில் சென்ற விஜய் ரித்திக் என்ற என்ஜினீயர் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.64 ஆயிரத்து 500-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

32 பதற்றமான வாக்குச்சாவடிகள்

இதற்கிடையே ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், இந்த வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 260 தேர்தல் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்றும் மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்